கேள்வி: ஐயனே மகாபாரதத்தை எழுதுவதற்காக விநாயகர் பெருமான் தன் தந்தத்தை முறித்ததாக புராணத்தில் கேட்டிருக்கிறேன் அதன் காரண காரியத்தை விளக்குங்கள்:
வியாச பகவான் ஞான திருஷ்டியிலே அருளிய மகாபாரதத்தை வியாசரின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப விரைவாக பதிவு செய்ய வேண்டும் என்றால் அத்தகைய ஆற்றல் இறைவனுக்குத்தான் உண்டு. அந்த இறைவன் அந்த பரம்பொருள் விநாயக வடிவமெடுத்து எழுதியது என்பது உண்மை மட்டுமல்ல. அப்பொழுது எழுதப்பட்ட அந்த சுவடி இன்றும் பூமியிலே இமயமலை சாரலிலே இருக்கிறது என்பது உண்மையோ உண்மை. வால்மீகி எழுதிய அந்த மூல நூலும் இன்னும் இருக்கிறதப்பா. இவைகள் ஒருபுறம் இருக்கட்டும். ஆற்றல் மிக்க வியாச பகவான் எண்ணினால் அந்த எண்ணங்கள் அப்படியே அந்த ஓலையில் பதியட்டும் என்றால் பதிவு செய்யப்பட்டிருக்கும் அல்லது வியாசபகவான் என்ன எண்ணுகிறாரோ அவையெல்லாம் அந்த ஓலையிலே பதியட்டும் என்று விநாயகப் பெருமான் எண்ணியிருந்தாலும் அது பதிந்திருக்கும். இருந்தாலும் மனித ரீதியாக ஒரு மனிதன் எப்படி செயல்பட வேண்டும்? ஒரு செயல் என்று வந்துவிட்டால் எல்லாவற்றிலும் இறையாற்றலை பயன்படுத்த தேவையில்லை. தன்னிடம் ஆற்றல் இருக்கிறது என்பதற்காக எல்லா செயலையும் அந்த ஆற்றலை கொண்டு தான் செய்ய வேண்டும் என்பதில்லை என்பதை மனிதனுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காக இறைவன் நடத்திய நாடகம்.