அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
சித்தர்கள் இருக்கிறார்கள் இல்லை. இறை இருக்கிறது அல்லது இறை இல்லாமல் போகிறது. சட்டம் இல்லாமல் போகிறது. இப்படி எது இருந்தாலும் இல்லாமல் போனாலும் ஒவ்வொரு மனிதனும் நல்லவனாக மிக மிக நல்லவனாக மாற வேண்டியது கட்டாயம். அதனால் தான் சிந்திக்கும் ஆற்றல் அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இது போல் நிலையிலேயே தொடர்ந்து இறைவழியில் வருவதாகவும் சித்தர்கள் வழியில் வருவதாகவும் கூறிக் கொள்கின்ற மனிதன் இந்த வழிமுறையை அறியாத தெரிந்து கொள்ளாத அல்லது அறிந்தும் பின்பற்ற முடியாத எத்தனையோ சராசரி மனிதர்கள் வாழ அவர்கள் செய்ய அஞ்சுகின்ற செயலை எம்மை அறிந்தும் எம் வாக்கை அறிந்தும் இன்னும் பாவம் புண்ணியம் என்பதெல்லாம் ஓரளவு தெரிந்தும் தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் விதியை நோவதா? அல்லது சரியாக வழி காட்டாத நிலையில் நாங்கள் இருக்கிறோம் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது ஓலையிலே வந்து கனக வண்ண அச்சரத்திலே காட்டி காட்டி காலம் தோறும் ஓதி ஓதி அவற்றையெல்லாம் செவியில் கேட்டு கேட்டு மனதிலே பாதிக்காமல் விட்ட சேய்களைப் பற்றி விசனப்படுவதா?
எம் வழியில் வருவதாக எவனொருவன் உறுதியாக முடிவெடுத்து வந்தாலும் உடனடியாக சற்றும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் எப்படி வீட்டிற்குள் அரவம் வந்துவிட்டால் அதனை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஒரு மனிதன் ஈடுபடுகிறானோ எப்படி ஒரு இல்லம் தீப்பிடித்து எரிந்தால் அதை அணைக்க முயல்கிறானோ அதேபோல உள்ளத்திலே ஒரு தீய எண்ணமும் ஒரு ஒழுக்கக் கேடான எண்ணம் தோன்றினால் அது முளை விடும் பொழுதே அதனை கிள்ளி எறிந்து விட வேண்டும். அது விருட்சமாகி விட்டால் பின்னர் அதை அகற்றுவது கடினம். அது இருந்து விட்டுப் போகட்டும் நன்றாக தானே இருக்கிறது அழகாக தானே இருக்கிறது என்று ஒரு மனிதன் எண்ணினால் பிறகு அந்த தீய விருட்சம் அவன் உள்ளம் என்னும் வீட்டையே இடித்து விடும். எனவே இது போல் கருத்தை மனதில் வைத்துக் கொண்டு காலாகாலம் எமது வழியிலே விடாப்படியாக வருகின்ற சேய்களுக்கு இறைவன் அருளால் யாம் எமது நல்லாசியைக் கூறிக் கொண்டே இருப்போம் ஆசிகள்.