கேள்வி: இறைவனை நம்புகின்ற புண்ணிய ஆத்மா ஒன்று சில நேரங்களில் இறைவனுக்கு எதிரான பாவ காரியத்தில் பங்கேற்க வேண்டிய விதி அமையும் போது அந்த பாவம் அந்த ஆத்மாவை சேருமா?
இறைவன் கருணையால் ஒருவன் இறைவனை பூஜிக்கிறான் அல்லது இறைவனை எதாவது அபவாதமாக பேசுகிறான். இறைவன் இருப்பதை ஒத்துகொள்கிறான். ஆனால் ஏதோ ஒரு சினத்திலே இறைவனை அப்படி தூஷிக்கிறான். அதை சராசரி மனிதன் செய்தால் இறைவனோ மகான்களோ மற்றவர்களோ அவன் அறியாமையில் இருக்கிறான் என்று பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் பல கோடி தவங்கள் செய்து மனிதனை விட பல மடங்கு உயர்ந்த நிலையில் தேவனாகவோ யக்ஷனாகவோ இருக்கக் கூடிய ஒருவன் எதாவது ஒரு சிறிய வருத்தத்தால் இறைவனை தூஷித்து ஆனால் மற்ற தேவதைகளை மகிழ்விப்பதற்காக யாகங்கள் செய்தால் இறைவனை தூஷிக்கிறானே நாமெல்லாம் யாகத்திற்கு செல்லக்கூடாது என்ற சிறிய சிந்தனைகூட யாருக்கும் இராதா?
எதற்காக தக்ஷன் (செய்த) யாகத்தில் எல்லோரும் ஏன் கலந்து கொள்ள வேண்டும்? விதி. நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இறைவனுக்கு அருகில் இருந்தாலும் இறைத் தன்மையை எந்த ஆத்மா பரிபூரணமாக புரிந்து கொள்கிறதோ அது வெறும் பார்வையாளனாகத்தான் இருக்கும். அது எதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாது. எதாவதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்றால் தாமரை இலை தண்ணீர் போல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால் நீ கூறியது போல் பாவம் என்பது வராமல் இருக்கும். ஆனால் அதிலேயே மூழ்கி விட வேண்டிய நிலையில் மனிதனோ தேவர்களோ மற்ற தேவதைகளோ ஈடுபடுவதால்தான் இதுபோல் நிலை உருவாகிறது.