கேள்வி: உடல் உறுப்புகள் தானம் செய்தால் அவை நல்லவருக்கும் பொருத்தப்படும் தீயவருக்கும் பொருத்தப்படும். தீயவைகளுக்கு நம் உடல் உறுப்புகள் பயன்பட்டால் அதன் காரணமாக பாவங்கள் வந்து சேருமா?
இறைவன் அருளால் உடல் உறுப்புகள் நல்லவர்களுக்குத்தான் பயன்பட வேண்டும் என்ற எண்ணம் ஒருவகையில் நன்றுதான் என்றாலும்கூட இறைவனின் பார்வையிலே எல்லோரும் சேய்களே (பிள்ளைகளே). ஒரு தாய்க்கு சில பிள்ளைகள் இருக்கும் பட்சத்தில் ஓரிருவர் தகாத செயல்களை செய்யும் பொழுது மற்றவர்கள் வெறுக்கலாம். சமுதாயம் வெறுக்கலாம். ஆனால் அந்த தாய்க்கு வெறுப்பு வராது. இவன் அறியாமையால் தவறு செய்கிறான். இவனைத் திருத்த வேண்டும் என்றுதான் எண்ணுவாள். அதைப் போல இறைவனும் அறியாமையால் தவறு பாவங்கள் செய்கின்ற ஆன்மாக்களை திருத்துவதற்கு சந்தர்ப்பங்களைத் தருகிறார். நல்லவர்களுக்கு மட்டும்தான் என்றால் சூரிய ஔி மழை காற்று என்று நல்லவர்களுக்கு மட்டும் அவை பயன்படுமாறு இறைவன் செய்திருப்பார். எல்லோருக்கும் பயன்படுமாறு இறைவன் எல்லாவற்றையும் பொதுவில் வைத்திருக்கிறார். இந்த உறுப்பு நல்லவர்களுக்கு பயன்படட்டும் என்று பிராத்தனை வைத்துக் கொள். அதனையும் விதிப்படி நல்லவன் அல்லாதவனுக்கு சென்றால் அதுவும் ஒரு விதி என்று எண்ணி சமாதானம் அடைவதைத் தவிர வேறு வழியில்லை.
கேள்வி: கரிநாள்களில் பிறந்தவர்களுக்கு நவகிரகங்கள் நற்பலன்களைத் தராது என்ற கருத்து பற்றி:
கரி என்ற சொல்லுக்கு சனிபகவான் என்ற பொருளும் இருக்கிறது. விநாயகபகவான் என்ற பொருளும் இருக்கிறது. இந்த ஒரு நாளை வைத்து பிறந்ததால் மட்டும் அதிக நஷ்டம் அல்லது அதிக உயர்வு என்று பொருள் கொள்ளுதல் கூடாது. வழக்கம் போல் பிறக்கின்ற குழந்தையின் கர்மவினை மற்றும் ஜாதகப்பலனை பார்த்துதான் முடிவெடுக்க வேண்டும்.