கேள்வி: வாசி யோகம் பற்றி?
இறைவனின் அருளைக் கொண்டு யோகம் என்பது மனிதர்களால் பல்வேறுவிதமாக கையாளப்படுகிறது. ஒருவன் நல்ல ஆரோக்யமான உடலை பெற்று நல்ல பதவியில் இருந்தால் அவனுக்கென்னப்பா யோகக்காரன் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் யோகம் என்பதை விட ஏகம் என்பதே சரியான பொருளாக இருக்கும். ஏகம் என்பது தனித்திருத்தல். தனித்திருத்தல் என்றால் ஏதோ கூட்டங்களை விட்டு ஒதுங்கியிருத்தல் என்று தவறாக எண்ணுகிறார்கள் அப்படியல்ல. உள்ளத்திலிருந்து இந்த உலகத்தைப் பிரித்து தனித்திருத்தல். ஏகமாக இருத்தல். அப்படி ஏகமாக இருக்கும் பொழுதுதான் ஏகனாக இருக்கக்கூடிய அந்த ஏகாம்பரனின் அருள் கிட்டும். அப்படி கிட்டுகின்ற வழிமுறைகளில் ஒன்றுதான் இது போன்ற வாசி யோகம் வாசிக் கலை பிராணாயாமம். முதலில் உடலை சரி செய்யாமல் சுவாசப் பயிற்சியில் சென்றால் தேவையில்லாத பின் விளைவுகள் ஏற்படும். எனவே உடலை நன்றாக பரிபூரணமாக ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு உடல் ரீதியான சில பயிற்சிகளையெல்லாம் செய்துவிட்டு பிறகு கும்பகம் செய்யாமல் அதாவது மூச்சை உள்ளே நிறுத்தாமல் ஆழ்ந்த சுவாசத்தை அதிகாலையிலே வாய் வழியாக இல்லாமல் நாசி வழியாக மட்டும் விட பழகிக்கொண்டே வந்தால் பிறகு இன்னவன் கூறுகின்ற வாசிக்கலையானது காலப்போக்கிலே இறையருளால் யாம் கூறுகின்ற வழிமுறைகளை பின்பற்றிக் கொண்டே வந்தால் சித்தியாகும். ஆனால் வாசி கற்றுக் கொடுக்கும் இடங்களெல்லாம் நூற்றுக்கு நூறு சரியான முறை என்று எம்மால் ஏற்றுக் கொள்ள இயலாது. தவறான மூச்சு பயிற்சியால் உடலில் தேவையில்லாத பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை மனிதர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.