கேள்வி: தீட்சை பற்றி
இறைவன் அருளால் ஒரு முழுமையான வழிகாட்டுதல் நெறிகாட்டுதல் என்பதைதான் தீட்சை என்றுகூட சொல்லலாம். ஆனால் தீட்சை என்ற சொல்லுக்கு உண்மையான பொருள் என்ன? என்றால் ‘தீ’ என்றால் ஒருவகையில் அழிப்பது. ஒருவனிடம் இருக்ககூடிய மல மாயங்களை பாவங்களை அழித்து அவனை மேலே தூக்குவது என்பதுதான் தீட்சை என்பதின் பொருளாகும். ஆனால் அப்படி அழிக்கக்கூடிய சக்தி படைத்த மகான்கள் மிக மிகக் குறைவு. அப்படியே சக்தி படைத்திருந்தாலும் கூட இறைவனின் அருளாணையில்லாமல் யாருக்கும் அவர்கள் தீட்சை வழங்கமாட்டார்கள். மற்றபடி மனிதர்கள் தீட்சை வழங்குவதாக கூறுவதெல்லாம் ஒருவகையான வழிகாட்டுதல் என்று வைத்துக் கொள்ளலாம். இருந்தாலும் இப்படி முறையாக தீட்சை பெற்றால்தான் இறைவனின் அருள் கிடைக்கும் என்பதை நாங்கள் ஒருபொழுதும் ஒத்துக் கொள்வதில்லை. ஒவ்வொரு மனிதனின் மனமும் மெய்யாக மெய்யாக இறைவனை நோக்கி இறை நிலையை நோக்கி என்றென்றும் திசை திருப்பி வைக்கப்பட்டிருந்தால் இறைவனை பிடித்த வடிவத்திலே பிடித்த நாமத்திலே வணங்கிக் கொண்டிருந்தால் கட்டாயம் இறைவனின் கருணை கிட்டும். இதற்கு தீட்சை பெற்றுதான் ஆகவேண்டும் என்று கட்டாயம் ஏதுமில்லை.
கேள்வி: கெளபனத்தை வீட்டில் வைத்து பூஜிப்பது பற்றி
மிகவும் சிறப்பு அப்பா. அதற்காக பஞ்சமா பாதகங்களை செய்கின்ற ஒரு மனிதன் அதை வாங்கி இல்லத்தில் (வீட்டில்) வைத்தால் சிறப்பு என்று கொள்ள முடியாது. நஞ்சற்ற மனம் தான் எதையும் சாதிக்கும். நஞ்சற்ற மனதிலே அமிர்தம் அமிர்தமாக இருக்கும். நஞ்சற்ற மனம் பஞ்சபாவங்கள் செய்யாத மனம் அங்குதான் இறை பிரசாதம் தன் பணியை பரிபூரணமாக செய்யும் என்பதை புரிந்து கொண்டால் அனைத்தும் புரியும்.