கேள்வி: நீதி பற்றி?
நீதி என்ற ஒன்று இருக்கிறதப்பா. விதுரநீதி ஜனகநீதி மதுரநீதி என்றெல்லாம் இருக்கிறது. இந்த நீதிகள் எல்லாம் உயர்ந்த தத்துவங்களையும் தர்மத்தையும் போதிக்கக் கூடியதாக இருக்கிறது. இதிலே சித்த நீதி என்ற ஒன்றும் இருக்கிறது. அதாவது நீதியை எப்படி பார்க்க வேண்டும்? பொதுநீதி தனிநீதி சிறப்புநீதி நுணுக்கநீதி என்றெல்லாம் பார்க்க வேண்டும். அது எப்படி? நீதி என்றாலே எல்லாமே ஒன்றுதானே? என்று நீ கேட்கலாம். ஆருரையாண்ட (திருவாரூர்) அந்த மன்னன் தன்னுடைய பிள்ளையவன் தேர் ஓட்டும் போது ஒரு பசுவின் கன்று தேர்காலிலே விழுந்து உயிரை விட்டதற்காக தன் பிள்ளையையும் அதே போல் தேர்க்காலிலே இட்டு அந்தத் தாய் பசு உயிர் வாடுவது போல் தானும் வாடினால்தான் என் மனம் சமாதானம் அடையும். அதுதான் நீதி என்று ஒரு புதிய சரித்தரத்தையே எழுதினான். ஆனால் அவன் அப்படி செய்திருக்க வேண்டும் என்று எந்த சாஸ்திரமும் கூறவில்லை.
சாஸ்திரப்படி ஆயிரக்கணக்கான பசுக்களையும் கன்றுகளையும் அவன் தானம் செய்திருந்தால் லட்சக்கணக்கான ஏழைகளுக்கு போஜனத்தை(உணவை) தானம் செய்திருந்தால் பல ஏழை பெண்களுக்கு திருமணத்தை நடத்தி இருந்தால் சிவ ஆலயங்களையும் வேறு ஆலயங்களையும் புதுப்பித்து கலச விழா நடத்தியிருந்தால் எல்லாவற்றையும் விட சாஸ்திரத்திலேயே என்ன கூறியிருக்கிறது? என்றால் ஒரு பசுவை அறிந்தோ அறியாமலோ கொன்றுவிட்டால் அப்படி கொன்றவன் 12 ஆண்டு காலம் பசு தொழுவத்திலேயே படுத்து உறங்க வேண்டும். பசுமாடு உறங்கும் போது இவன் உறங்க வேண்டும். பசுமாடு உண்டால் இவன் உண்ண வேண்டும். இல்லையென்றால் இவனும் விரதம் இருக்க வேண்டும். பசுக்களை நல்ல முறையில் குளிப்பாட்டி பராமரித்து அந்த இடத்தை சுத்தமாக வைத்திருந்து பசுக்களோடு பசுக்களாக வாழ்ந்தால் அந்த தோஷம் போகும் என்ற ஒரு கணக்கு இருக்கிறது சாஸ்த்திரத்தில்.
நீதி எதற்காக இப்படி நுணுக்கமாக குறிக்கப்பட்டிருக்கிறது? என்றால் ஒவ்வொரு மனிதனின் மனப்பக்குவத்திற்கு ஏற்ப சில நீதிகளை பின்பற்றலாம். ஒருவனின் தோஷத்தை நீக்க லகரம் (லட்சம்) ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கு என்றால் வசதியில்லாதவன் முடியாதவன் என்ன செய்வது? லகரம் (லட்சம்) எறும்புகளுக்கோ அல்லது மீன்களுக்கோ தான் அவனால் தர முடியும். ஆனால் வசதியுடையவன் லகரம் (லட்சம்) ஏழைகளுக்கு அன்னதானம் வழங்காமல் லகரம் (லட்சம்) எறும்புகளுக்கோ மீன்களுக்கோ உணவிட்டு விட்டு இதுவும் சாஸ்திரத்தில் கூறப்பட்டு இருக்கிறதே என்றால் அவனுக்கு அந்த புண்ணியம் கிட்டாது. ஆனால் லகரம் (லட்சம்) மீன்களுக்கு மட்டும் உணவிடக்கூடிய தகுதி இருப்பவன் லகரம் மீன்களுக்கு உணவிட்டால் அவனுக்கு அந்த புண்ணியம் வந்துவிடும். எனவே நீதியையும் தர்மத்தையும் புரிந்து கொள்வது சற்றே கடினம்.