கேள்வி: மும்மூர்த்திகளில் (பிரம்மா சிவன் விஷ்ணு) மூவரும் ருத்ரன் தான் சிவனா அல்லது இவர்கள் மூவருக்கும் மேலே உள்ள சக்தியா?
ஒரே பசுவின் கால் கண் வால் மடியைக் காட்டி இதுதான் பசுவா? இதுதான் பசுவா? என்றால் எப்படி இருக்குமோ அப்படிதான் நீ வினவிய வினாவும். அனைத்துமே பரம்பொருள்தான். பரம் பொருளை நீ பிரம்மா விஷ்ணு ஏன் சிறிய தேவதையாக அன்னை பராசக்தியாக வணங்க விரும்பினால் அப்படியே செய். இறையை வணங்க ஒரு வுருவம் தேவை. அதை வைத்துதான் ஒரு மனிதன் தன் கவனத்தை வளர்த்துக் கொள்ள முடியும் என்பதற்காக தான் ஒரு புற தோற்றம். அதையும் தாண்டிய ஒரு நிலைதான் இறை உணர்வு. அந்த இறை உணர்வை நீ உணரும் போது நீ வினவிய அனைத்து வினாக்களும் ஏன் அனைத்து ஐயங்களும் அடிப்பட்டுப் போய்விடும். பரிபூரண நிசப்தம் சாந்தம் சாந்தி ஒரு இனம் புரியாத இன்ப உணர்வு அதாவது கடுமையான குளிர் வாட்டி கொண்டிருக்கும் போது வெதுவெதுப்பான நீரில் குளிக்கும் போது ஏற்படும் அனுபவம் போல் வைத்துக் கொள். எனவே இது அதுவா? அது இதுவா? ஏன் நான்முகனுக்கு (பிரம்மன்) ஆலயம் இல்லை? இது எல்லாம் இறையோ பரம் பொருளோ எடுத்த முடிவு அல்ல. இன்று எப்படி தன்னை புத்திசாலி என்று கூறிக்கொண்டு முட்டாள்தனமான மனிதர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்களோ அப்படி ஒரு முட்டாள் பின்னால் பல முட்டாள்கள் போய் கொண்டிருக்கிறார்கள்.
வெறும் பகட்டு மயக்கு வாரத்தைகளை கேட்டு அவன் பின்னால் செல்லும் கூட்டம் எக்காலத்திலும் இருக்கிறது. அப்படிதான் கால ஓட்டத்தில் அனைத்து ஆலயங்கள் வழிபாடுகள் இருந்தது போய் சில தெய்வ வழிபாடுகள் மறைந்து போயிருக்கிறது. எனவே இதற்கும் இறைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனக்கு இப்படித்தான் ஆலயம் வேண்டும் என்று தெய்வம் கூறியதே இல்லை. மனிதர்கள் பாமர நிலையில் உணர வேண்டும் என்பதற்காக ஒரு சில வழிபாட்டு முறைகளையும் உச்ச நிலையில் தியானம் போன்ற முறைகளையும் மகான்கள் வகுத்து கொடுத்தார்கள். ஆனால் இவன் ஏதாவது ஒரு நிலையில் நின்று கொண்டு அதுதான் உச்ச கட்டம் என்று வாதாடுகின்ற பரிதாபத்திற்குரிய மனிதர்களாக கால போக்கிலே ஒவ்வொருவரும் மாறிவிட்டது தான் வேதனை.