கேள்வி: ஜீவாத்மாவை எப்பொழுது பாவம் பற்றத் தொடங்குகிறது?
எப்பொழுது பரமாத்வாவை ஜீவாத்மா பிரிந்ததாக நம்பப்படுகிறதோ கூறப்படுகிறதோ எப்பொழுது பிறவி என்று இந்த மாய லோகத்திற்கு ஒரு உயிர் வருகிறதோ அப்பொழுது பாவம் பற்றி விடுகிறது.
கேள்வி: விதியைத் தாண்டி கேள்விகளை கேட்க சிந்திக்க செயல்பட எங்களுக்கு அருள்புரிய வேண்டும்
இறைவன் அருளால் விதி தாண்டி எத்தனையோ நாங்கள் கூறுகிறோம். ஆனால் அதனை ஏற்கத்தான் மனிதனின் மனம் இடம் தருவதில்லை. ஒருவன் ஒரு மிகவும் அழகான இல்லம் வைத்திருப்பதாகக் கொள்வோம். இப்பொழுது இங்கு ஆணையிடுகிறோம். அந்த இல்லத்தை விற்றுவிட்டு தர்மம் செய் என்றால் அதை செய்ய ஆயத்தமாக இருக்கிறானா? இங்கு யாராவது இப்படி இருக்கிறார்களா? இருந்தால் விதி தாண்டி எப்படி வாழ்வது? விதி தாண்டி எதையெல்லாம் செய்யலாம். எப்படி செய்யலாம் என்று நாங்கள் கூறுவோம்.
கேள்வி: ஒருவனுக்கு பாவம் பார்க்கப் போனால் அவர்களின் பாவம் நம்மை பற்றிக் கொள்ளும் என்ற சொல் வழக்கில் இருக்கிறது அது குறித்து
இறைவன் அருளால் பிறரை பார்த்து இரக்கப்பட்டு உதவி செய்து நாம் சங்கடத்தில் மாட்டிக் கொள்வோம் என்ற அடிப்படையில்தான் உன் வினா அமைந்திருக்கிறது என்று யாம் எண்ணுகிறோம். கட்டாயம் பிறருக்கு உதவ வேண்டும். அப்படி உதவும் பொழுது உதவுகின்ற மனிதனுக்கு தொடர்ந்து இன்னல்கள் வருமேயானால் நாகரீகமாக ஒதுங்கிக் கொள்ளலாம். தவறேதுமில்லை. இது மனித ரீதியான சிந்தனை. ஆனால் எத்தனை கஷ்டங்கள் துன்பங்கள் வந்தாலும் தர்மத்தை கைவிடாமல் பிறருக்கு உதவுவதை நிறுத்தாமல் இருப்பதுதான் மகான்களின் போதனை.