கேள்வி: வால்மீகி இராமாயணத்தில் ராமர் மான் மாமிசத்தை உண்டார் என்று கூறப்படுவது இடைசெருகலா?
மகாவிஷ்ணுவின் அவதாரம் ராமர் என்பதை நீ ஒப்புக்கொள்கிறாயா? (பதில் : ஆமாம்). அப்படியென்றால் மான்களை வேட்டையாடவே கூடாது என்று மிக மிக சராசரியான மன்னனே அக்காலத்திலெல்லாம் சட்டம் இயற்றியிருந்தான் தெரியுமா? மான்கள் முயல் இன்னும் சாதுக்களான விலங்குகளை யாரும் எக்காலத்திலும் வேட்டையாடுதல் கூடாது. இன்னும் கூறப்போனால் முறையான பக்குவம் பெற்ற மன்னர்கள் பொழுது போக்கிற்கு என்று வேட்டையாட செல்ல மாட்டார்கள். என்றாவது கொடிய விலங்குகள் மக்களை இடர்படுத்தினால் மட்டும் அதிலும் முதலில் உயிரோடு பிடிக்கதான் ஆணையிடுவார்கள். முடியாத நிலையில்தான் கொல்வார்கள். ஒரு சராசரி மன்னனே இப்படி செயல்படும் பொழுது மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படுகின்ற ஸ்ரீ ராமபிரான் இவ்வாறெல்லாம் செய்திருப்பாரா? கட்டாயம் செய்திருக்கமாட்டார். அப்படி விலங்குகளைக் கொன்று தின்னக்கூடிய அளவில் ஒரு கதாபாத்திரம் கற்பனையாகக்கூட ஒரு ஞானியினால் படைக்கப்படாது. ஒரு வேளை அது உண்மை என்றால் அப்பேற்ப்பட்ட ஸ்ரீ ராமர் தெய்வமாக என்றும் போற்றப்படுவாரா? யோசித்துப் பார்க்க வேண்டும். என்ன காரணம்? பின்னால் மனிதனுக்கு வசதியாக இருக்க வேண்டும். ராமரே இவற்றையெல்லாம் உண்டிருக்கிறார். நான் உண்டால் என்ன? என்று பேசுவற்கு ஒரு காரணம் வேண்டுமல்லவா?
பலம் என்பது உடலில் இல்லை மனதில் இருக்கிறது. சுவாசத்தை எவனொருவன் சரியாக கட்டுப்படுத்தி சிறு வயதிலிருந்து முறையான பிராணாயாமத்தை கடைபிடிக்கிறானோ அவனுக்கு 72000 நாடி நரம்புகள் பலம் பெறும் திடம் பெறும். அவனுடைய சுவாசம் தேவையற்ற அளவிலே வெளியேறாது. நன்றாக புரிந்து கொள். எவனொருவன் வாய் வழியாக சுவாசம் விடுகிறானோ அவனுக்கு தேகத்தில் (உடலில்) அத்தனை வியாதிகளும் வரும்.