கேள்வி: முன்னோர்கள் கடனை எப்படி கொடுப்பதென்று மீண்டும் எங்களுக்கு நினைவூட்ட வேண்டும்?
இறைவன் கருணையைக் கொண்டு சுருக்கமாக இத்தருணம் கூறுகிறோம். எத்தனையோ விதிமுறைகளும் விளக்கமான முறைகளும் இருக்கிறது. எல்லாவற்றையும் எல்லா மனிதர்களாலும் எல்லாக் காலங்களிலும் பின்பற்றுவது மிக மிகக் கடினமப்பா. குறைந்தபட்சம் ஒரு தினம் ஒரு ஏழைக்காவது அன்னமிடுதல் வேறு தக்க உதவிகள் செய்தல் அன்றாடம் ஒரு ஆலயம் சென்று வழிபாடு குறிப்பாக பைரவர் வழிபாடு. அந்த நிலையிலே நிறைமதி (பெளர்ணமி) காலம் போன்றவற்றில் ஒரு சிறப்பான வழிபாடு இயன்றவரை தர்ம காரியங்கள் அதோடு மட்டுமல்லாமல் ஆ (பசு) கோட்டம் வைத்து நல்ல முறையிலே பராமரிக்கும் ஆலயங்களிலே ஆவினங்களுக்கு (பசுவினங்களுக்கு) இயன்ற உதவிகள் செய்தல் இங்கே ஆவினம் (பசு இனம்) என்று கூறுவது ஒரு குறிப்பாக. அதற்காக வேறு உயிர்களையெல்லாம் கவனிக்கக் கூடாது என்று பொருள் அல்ல. இறைவன் கருணையைக் கொண்டு இதோடு மட்டுமல்லாமல் வருடம் ஒரு முறையாவது தெய்வத்தீவு எனப்படும் இராமேஸ்வரம் சென்று வழிபாடும் இயன்ற வரையில் அங்கு தற்காலத்தில் 100 க்கு 100 புனிதமான முறையிலே திலயாகம் செய்யப்படாவிட்டாலும் அந்த மண்ணிலே பூஜை செய்வதால் சில நன்மைகள் வரும் என்பதால் யாங்கள் கூறுகிறோம். இயன்றவரை கூடுமானவரை அங்கு ஒரு தில யாகத்தை செய்து வருவதும் ஒரு முறை செய்துவிட்டால் போதும் மீண்டும் செய்ய வேண்டாம் என்ற கருத்தையெல்லாம் விட்டுவிட்டு வாய்ப்பு உள்ளவர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ ஒரு வருடத்திற்கு ஒரு முறையோ அங்கு எல்லா வகையான யாகங்களோடும் தில யாகத்தை செய்வதும் அப்படியில்லாதவர்கள் அங்கு மூன்று தினங்கள் குறைந்தபட்சம் தங்கி இறை வழிபாடும் இயன்ற தர்ம காரியங்களை செய்வதும் ஏற்புடையதாகும். இவை எதுவுமே செய்ய இயலாதவர்கள் அன்றாடம் ஆலயம் சென்று பைரவரை வணங்குவதும் அதுவும் இயலாதவர்கள் இல்லத்திலே அமைதியாக அமர்ந்து 108 முறை பைரவர் காயத்ரி மந்திரத்தை உருவேற்றுவதும் அதுவும் இயலாதவர்கள் பைரவர் திருவடி போற்றி என்று கூறுவதும் இப்படி ஏதாவது ஒன்றை பின்பற்றினால் நல்ல பலன் உண்டு.