கேள்வி: ஸ்ரீவித்யா உபாசகர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகளையும் ஸ்ரீசக்ரமகா மேருவின் சிறப்பையும் விளக்குங்கள்
இறைவன் அருளால் இன்னவன் கூறிய பூஜைக்கு மட்டுமல்ல எல்லா வகையான பூஜைகளுக்கும் அடிப்படை ஒழுக்கம் அவசியம். பூஜைகளே செய்யாவிட்டாலும் போதும் ஒரு மனிதன் ஒழுக்கமாக நேர்மையாக வாழ்ந்தாலே அதுவே ஒரு பூஜைதானப்பா. பூஜை செய்கிறேன் என்று ஒருவன் பிறரை இடர்படுத்துவதோ தன்னை இடர்படுத்திக் கொள்வதோ அல்ல. எனவே மனோரீதியாக ஒருவன் மனித நேயத்தை வளர்த்துக் கொண்டு மனதை செம்மைபடுத்த மனதை வைராக்யப்படுத்த மனதை வைரம் போல் உறுதிப்படுத்தத்தான் பூஜைகள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் அந்த பூஜையை செய்து அதனால் மனசோர்வு என்றால் அவன் அந்த பூஜையையே செய்யத் தேவையில்லை. எனவே சரியான வழிமுறை என்பதைவிட ஒரு மனிதனின் மனநிலைதான் அங்கே முக்கியம்.
இந்த ஸ்ரீசக்ர மந்திரங்களை முறையாக உபதேசமாக தக்க மனிதரிடம் பெற்று முறையாக ஒருவன் அந்த பூஜையை செய்து வந்தால் நல்ல பலன் உண்டு. இதை நாங்கள் ஒரு பொழுதும் மறுக்கவில்லை. ஆனால் அங்கே வெறும் பூஜை என்ற அளவில் மட்டும் மனித நேயம் புறக்கணிக்கப்பட்டால் அந்த பூஜையால் எந்த பலனும் இராது என்பதை கூறிக்கொள்கிறோம். இந்த பூஜைகள் (ஸ்ரீவித்யா மார்க்க பூஜைகள் – அன்னை ஸ்ரீலலிதாம்பிகையின் தச மகாவித்தை) ஒரு மனிதனின் பல்வேறு பிறவிகளின் பாவங்களைப் போக்கும். போக்குவதோடு குண்டலினி சக்தியையும் மேலே எழுப்பும். முறையாக ஸ்ரீசக்ர உபதேசம் பெற்று தன் வாழ்நாள் முழுவதும் நித்ய ஸ்ரீசக்ர பூஜையை ஒருவன் செய்தால் பரிபூரண தவத்திற்கு சமமப்பா.
கேள்வி: புறசடங்குகள் பற்றி
ஆத்மார்த்தமான பக்திதான் முக்கியம். இயன்ற தர்மங்கள் பிராத்தனைகள் தாம் முக்கியம். பரிகாரங்களை விட மனம் ஒன்றிய பிராத்தனைகள் அதிகம் சக்தி வாய்ந்தவை.