கேள்வி: பெரம்பலூர் அருகில் உள்ள பிரம்மரிஷி மலையில் 210 சித்தர்கள் வாழ்வதாக சொல்லப்படுவது பற்றி?
மலைகளில் சித்தர்கள் இருக்கிறார்களா? இல்லையா? ஆலயத்தில் சித்தர்கள் இருக்கிறார்களா? இல்லையா? பழனியில் போகர் இருக்கிறாரா? இல்லையா? கோரக்கர் பொய்கை நல்லூரில் இருக்கிறாரா? இல்லையா? இதுபோன்ற விவாதங்கள் காலகாலம் இருந்து கொண்டுதான் இருக்கும். எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கு சென்று வழிபடக்கூடிய மனித மனதில் பக்தி இருக்கவேண்டுமப்பா. பக்தியோடு ஒருவன் தன் இல்லத்திலிருந்து வழிபட்டாலும் சித்தர்கள் அங்கே வந்து காட்சி தருவார்கள். இதற்காக வனத்திற்கு (காட்டிற்கு) செல்ல வேண்டும் மலைக்கு செல்ல வேண்டும் என்பதல்ல. ஆனால் தேகம் நலமாக இருக்க வேண்டுமென்றால் ஒரு மனிதனுக்கு மூலிகைகளின் காற்று அவசியம். அதனால்தான் இது போன்ற மலை பிரயாணத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். எனவே நீ கூறிய இடத்தில் மட்டுமல்ல சித்தர்கள் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். மனிதன் மனதிலே களங்கமில்லாமல் தூய எண்ணத்தோடு பிராத்தனை செய்தால் சித்தர்களின் அருளாசி கட்டாயம் கிட்டும்.
கேள்வி: மாயன் காலண்டர்படி 2012 இல் அழிவு ஏற்படும் என்ற செய்தி பற்றி
எந்த பாதிப்பும் ஏற்படாதப்பா. இது போன்ற வானியல் நிகழ்வுகள் மனித கண்களுக்குப் புலப்படாமல் அன்றாடம் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. அண்ட பிரபஞ்சங்கள் இயங்கும் போது அந்த இயக்கத்தின் காரணமாக சில எதிர் விளைவுகள் ஏற்படத்தான் செய்யும். ஆனால் இதற்கும் அழிவற்கும் எந்த தொடர்பும் இல்லை.