ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 114
கேள்வி: கண்ணையா யோகியைப் பற்றி?
இறைவனின் அருளைக் கொண்டு இந்த மகான்களும் ஞானிகளும் தாமே எல்லா இடங்களிலும் இருந்து கொண்டு எல்லா மனிதர்களையும் நெறிப்படுத்த இயலாது. சுவடி மூலம் வாக்கை கூறலாம். மனித வடிவிலே சிலரை ஆட்கொண்டு நெறிப்படுத்தலாம். இன்னும் சிலரை உள்ளத்திலே உணர்த்தி ஆட்படுத்தலாம். இதுவும் வினை சார்ந்ததே. அவனவன் வினைக்கு ஏற்பதான் இறைவன் அருளால் செயல்படுத்துப்படும். அப்படி சில மனிதர்களை இறைவனின் அருளாணைக்கு ஏற்ப எம்போன்ற மகான்கள் ஆட்கொண்டு அந்த மனிதர்கள் மூலம் பல மனிதர்களை ஆன்ம வழியில் திசை திருப்ப இறைவன் திருவுள்ளம் கொண்ட பொழுது அப்படி எத்தனையோ மனிதர்களை தேர்ந்தெடுத்த பொழுது அதில் ஒருவன் தான் இன்னவன் வினவிய விழி ஐயா(கண்ணையா) என்ற நாமம் கொண்டோன் அந்த கண்ணையா நாமகரணம் கொண்டவன். அவனுக்கும் பல போதனைகளை யாம் நேரடியாகவே செய்திருக்கிறோம். இருந்தாலும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஸ்தலத்தை பார்த்து இங்கு மார்கண்டேயர் வந்து தவம் செய்து நிறைய பேறுகளை பெற்றிருக்கிறார். இங்கு சந்திரன் தவம் செய்து தோஷத்தை நீக்கிக் கொண்டிருக்கிறார். இங்கு பிருகு முனிவர் தவம் செய்திருக்கிறார் என்றெல்லாம் ஸ்தல புராணம் கூறும். அதற்காக அங்கு சென்று ஒரு மனிதன் வழிபட்டால் உடனடியாக பலன் கிடைக்குமா? என்றால் அங்கு தவம் செய்தவர்கள் எந்த நிலையில் தவம் செய்தார்களோ அந்த நிலையில் நாம் இருக்கிறோமா? என்று மனிதன் தம்மைத் தாமே பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே அந்த ஒரு மனிதனுக்கு நாங்கள் வழிகாட்டி அவனை எம் வழியில் அழைத்து சென்றிருக்கிறோம். அவனுக்கு நாங்கள் கூறியதை சிலவற்றை அவன் அவனை நாடி வருபவர்களுக்கு கூறியிருக்கிறான். அதில் அவனவன் பூர்வ புண்ணியத்திற்கு ஏற்ப சில அவனவன் அறிவிற்கு எட்டும். பல அறிவிற்கு எட்டாது.