கேள்வி: கும்பாபிஷேகமே நடக்காத பாழடைந்த ஆலயங்களில் அபிஷேகம் தீபம் ஏற்றுதல் செய்வதால் ஏற்படும் பலன்கள் பற்றி விளக்குங்கள் குருநாதா?
இறைவன் அருளாலே இறைவன் நீக்கமற எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறான். தூய்மையான உள்ளத்தோடு எண்ணத்தோடு சாத்வீகமான எண்ணத்தோடு எங்கு இறைவனை எண்ணி வழிபட்டாலும் இறைவன் அருள் அவனுக்குக் கிட்டும். கலச விழா எனப்படும் கும்பாபிஷேகம் ஆகாத பாழ்பட்ட ஆலயத்திற்கு தாராளமாக மனிதர்கள் சென்று உழவாரப் பணிகள் தீபங்கள் ஏற்றுதல் ஏனைய வழிபாடுகள் போன்றவற்றை தாராளமாக செய்யலாம். புரிவதற்காக யாம் வேறுவிதமாக கூறுகிறோம். தூய்மையான ஒரு ஆலயம் இருக்கிறது. நல்ல முறையிலே பஞ்ச வர்ணம் பூசப்பட்ட கோபுரம் இருக்கிறது. எங்கு நோக்கினாலும் பரிசுத்தம். எங்கு நோக்கினாலும் நறுமணம் சந்தனம் அகில் ஜவ்வாது மணக்கிறது. எல்லா இடங்களிலும் தூய்மையான நெய்தீபம் எரிகிறது. எல்லா இடங்களிலும் நல்ல முறையிலே மிக சுத்தமாகவும் எல்லா வசதிகளும் மிக அழகுற அமைக்கப்பட்டிருக்கிறது. தற்கால வசதிகள் அனைத்தும் அந்த ஆலயத்தில் இருக்கிறது. ஆங்காங்கே சலவை கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. பார்ப்பதற்கு நேர்த்தியாக மிகவும் அற்புதமாக தினமும் 6 கால பூஜை நடக்கிறது. உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் வருகிறார்கள். நறுமண மலர்கள் ஆங்காங்கே தூவப்படுகிறது. எல்லா வகையான வேத மந்திரங்களும் தேவார திருவாசகமும் ஓதப்படுகிறது. நித்திய பூஜை நடக்கிறது. வருவோர் போவோர்க்கெல்லாம் அன்னசேவை நடக்கிறது. இது விழிக்கு விருந்தாக மனதிற்கு சாந்தமாக இருக்கிறது. ஆனால் அங்குள்ள ஊழியர்கள் அங்கு வந்து போகக்கூடிய மனிதர்கள் உண்மையில் நல்ல தன்மை இல்லாதவர்களாகவும் வெறும் சுயநலவாதிகளாகவும் இருந்தால் அங்கு என்ன கிடைக்கும்? தீய நோக்கத்தோடு வந்தால் அங்கே இறைவன் இருப்பாரா? எனவே இறைவனுக்கு உகந்த இடம் ஒவ்வொரு மனிதனின் மனம்தான். அந்த மனம் சுத்தமாக பரிசுத்தமா நேர்மையாக நீதியாக சத்ய நெறியில்,தர்ம நெறியில் இருந்தால் எந்த இடத்திலும் இறைவன் அருள் மனிதனுக்கு உண்டு.