கேள்வி: பரமாத்மாவுடன் ஜீவாத்மா இரண்டற கலக்க எந்தெந்த நிலைகளைக் கடக்க வேண்டும்? ஒவ்வொரு நிலையிலும் எத்தகைய அபாயங்கள் காத்திருக்கின்றன?
இறைவனின் அருளால் யாம் கூறுவது என்னவென்றால் ஒரு மிகப்பெரிய மலை இருக்கிறது. சஹஸ்ரம் சஸஸ்ரம் (ஆயிரம் ஆயிரம்) படிகள் இருக்கிறது. உச்சியிலே இறைவன் அருள் புரியும் ஆலயம் இருக்கிறது. கதிர்மதி எனப்படும் அமாவாசை தினம். எங்கும் இருள் சூழ்ந்து இருக்கிறது. சிறிய ஔி கூட இல்லை. அடிவாரத்தில் ஒரு பக்தன் வந்து நிற்கிறான். உதவி செய்வார் யாரும் இல்லை. இப்பொழுது அவன் அத்தனை படிகளையும் ஏற சித்தமாக இருக்கிறான். அவன் என்ன வேண்டுவான்? ஔி இருந்தால் அந்த வெளிச்சத்திலே மெல்ல மெல்ல மேலேறி செல்லலாம் என்று எண்ணுவான். அப்படி ஏற எண்ணுபவனுக்கு மலை முழுவதும் தீப ஔிகள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்றாலும்கூட அதை அப்படி அவன் பார்ப்பதைவிட ஒரு சிறிய கை ஔி இருந்தால் ஏற நினைக்கும் முதல் படியில் அந்த வெளிச்சம் விழும். அதில் அவன் தன் பாதத்தை வைத்தபிறகு அந்த வெளிச்சம் அடுத்த படியை நோக்கி செல்லும். இப்படியாக படிப்படியாக அவன் சென்றுவிடலாம். எனவே ஒட்டு மொத்தமாக பிரபஞ்சம் கர்மா பிறவி இறைவன் பாவம் புண்ணியம் என்று பார்த்தால் மனிதனுக்கு மலைப்பாக இருக்கும். அதைவிட கிடைத்த இந்த வாய்ப்பை ஒரு மனிதன் பயன்படுத்திக் கொண்டு நேர்மையான முறையிலே கடமையை ஆற்றுதல் வாழ்வை நடத்துதல் அன்றாடம் இறை நாமத்தை ஜபித்தல் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்தல் அன்றாடம் ஒரு ஆலயமாவது சென்று வழிபாடு செய்தல் என்று இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதும் நீ எண்ணுகிற அந்த ஜீவாத்மா பரமாத்வை அடைவதற்கு மிக எளிய வழிகளை பரமாத்மாவே அந்த ஜீவாத்மாவிற்கு காட்டி அருள்வார்.