ஆதியிலே பாவவினைகள் எவ்வாறு ஏற்பட்டது?
பாவம் என்பதே பரம்பொருள் ஏகனாக (ஒருவன்) இருக்கும் பொழுது சகலமும் பரம் என்ற நிலையில் இல்லை. பரம் தன்னுடைய தரம் தாழும் என்று அறிந்தோ அறியாமலேயோ தன்னிடமிருந்து சிறிய சிறிய ஆத்மாக்களையெல்லாம் பிரித்து அனுப்பும் பொழுதே அங்கே பாவங்கள் உற்பத்தியாகிவிடுகிறது. எல்லா வகையிலும் சுகத்தையும் எல்லா வகையிலும் உயர்வையும் தந்து ஒரு பிறவியை முதலில் படைக்கும் பொழுதே தனக்கு இவ்வாறெல்லாம் கொடுக்கப்பட்டிருப்பது பிறருக்கு நன்மைகளை செய்வதற்குதான் என்று மனிதனோ அல்லது உயர்ந்த நிலையில் உள்ள தேவர்களோ சமயத்தில் புரிந்து கொள்ளாமல் ஆணவத்தால் தவறு இழைக்கும் பொழுது அங்கே முதல் பாவம் தோன்றுகிறது. அந்த பாவத்தால் சற்றே தரம் குறைந்து அடுத்த நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அங்கே பாவத்தை நீக்குவதற்கு வாய்ப்புகள் தந்தாலும் நீக்குவதற்கு பதிலாக மேலும் மேலும் பாவத்தை சேர்த்துக் கொள்ள அடுத்தடுத்து பிறவிகள் சங்கிலி போல் நீள்கிறது.
கேள்வி: அப்படியென்றால் பிரபஞ்சத்தில் அனைவரும் திருந்தி வாழ வழியே இல்லையா?
அதற்கு வழிகாட்டினால் அதை ஏற்கும் நிலையில் யாரும் இல்லை என்பதே உண்மையிலும் உண்மை.
கேள்வி: காலம் தானாக சுழற்சி பெறுமா? அல்லது மறுபடியும் அதை இறைவன் ஆரம்பத்திலிருந்து இயக்குவாரா?
இறைவனின் கருணையாலே வளைந்த நிலையிலே உள்ள ஆரத்திற்கு எது ஆரம்பம்? எது முடிவு? அதைப் போலத்தான் இந்த அண்ட சராசரமும் இறைவனின் இயக்கமும் இன்று ஆரம்பம் போல் தோன்றும். இன்னொன்று முடிவு போல் தோன்றும். முடிவிலும் ஆரம்பம் இருக்கும். ஆரம்பத்திலும் முடிவு இருக்கும்.