கேள்வி: எங்கள் ஊரிலே லட்சுமி நாராயணபெருமாள் ஆலய கும்பாபிஷேகம் நடத்தினோம். தங்களின் (அகத்திய மாமுனிவர்) திருமேனியையும் அக்கோவிலில் பிரதிஷ்டை செய்திருக்கிறோம். 48 நாள் மண்டல பூஜை நடந்த பொழுது ஒரு வாரம் உச்சி காலத்தின் போது பகவானின் திருமேனியில் வியர்வைத் துளிகள் வந்த வண்ணமே இருந்தது. அதன் பொருள் என்ன?
இறைவன் அருளாலே சில கற்களுக்கு இயற்கையிலேயே நீரை கசிவிக்கும் தன்மை உண்டு. இது விஞ்ஞான பார்வை. இன்னொன்று தெரியுமா? சீரலைவாய் (திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி) முருகனுக்கு வியர்ப்பதாக விசிறிய பக்தன் உண்டு. எங்கே வியர்க்கிறது? நான் பார்க்க வேண்டும் என்று சோதித்த வெள்ளையோனும் (டச்சுக்காரன்) உண்டு. அப்படி சோதிக்கும் பொழுது கற்சிலைக்கல் ஐம்பொன் சிலைக்கு வியர்த்ததை பார்த்த ஆதாரங்கள் எல்லாம் இருக்கிறதப்பா. எனவே இது இறையருள்தான் என்பதை இந்த பொல்லா கலியுகத்தில் மனிதர்கள் உணர வேண்டும். மனிதர்களுக்கு எதையாவது மனித சக்திக்கு மீறிய ஒன்றைக் காட்டினால்தான் இறைவன் மீது ஈடுபாடு ஏற்படும் என்பதற்காக அவ்வப்பொழுது இறை நடத்தும் லீலைகளில் ஒன்று.
கேள்வி: மயிலாடுதுறை அருகில் உள்ள கோமல் என்ற ஊரின் அருகில் வெள்ளை வேம்பு அம்மனைப் பற்றி
பொதுவாக இலைகளுக்கு நிறத்தைத் தரக்கூடிய நிறமிகள் விதவிதமான தன்மையைக் கொண்டது. அந்தத் தன்மைகள் மாறுபடும் பொழுது நீ கூறிய அந்த அமைப்பு விருட்சங்களுக்கு (மரங்களுக்கு) ஏற்படுகிறது. இருந்தாலும்கூட இந்த விஞ்ஞான நிலையையும் தாண்டி யாங்கள் கூறவருவது அதிலே அளவிற்கு அதிகமான இறையாற்றல் பொதிந்திருப்பது என்பது உண்மைதான். எனவே மனோ நிலையிலே அதிகம் பாதிப்பு ஏற்பட்டு மன பதட்டம் மன சிதைவு கொண்டவர்கள் சென்று அந்த விருட்சத்தை (மரத்தை) வழிபட நல்ல மாற்றம் ஏற்படும். இந்த அளவில் அதனை நுணுக்கமாக புரிந்துகொள்.