கேள்வி: தீபத்தை பற்றி சொல்லுங்கள் ஐயனே
இறைவனின் கருணையைக் கொண்டு இந்த தீபம் என்ற சுடர் ஔிக்கற்றைக் குறித்து கூறினால் கூறிக்கொண்டே இருக்கலாம். அது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் ஆன்மீகம் தவிர்த்து தெய்வீகம் தவிர்த்து மனித ரீதியாகப் பார்த்தால் இருளை யாரும் விரும்புவதில்லை. விழிகள் நன்றாக இருந்தாலும் இருளில் எதிரே இருக்கும் சூழலை உணர இயலாது. எனவே இருள் நீங்க வேண்டும் என்றால் அங்கே கட்டாயம் இருளுக்கு எதிரான ஒரு செயல் வேண்டும். அது ஔி ஒன்றுதான். அனல் அக்னி நெருப்பு என்று எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம். இவற்றிலிருந்து கிளம்பக்கூடிய கதிர்கள் ஆக்கப்பூர்வமான எண்ண அலைகளை மனிதனுக்கு ஏற்படுத்த வேண்டும். அதே சமயம் மனிதனின் உடல் ஆரோக்கியத்தையும் பேண வேண்டும். இப்படி கவனித்துப் பார்த்துதான் விதவிதமான தீபங்கள் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்தது. அந்த தீபங்களில் ஒன்றுதான் பரிசுத்தமான எள் எண்ணெய் தீபம் பரிசுத்தமான நெய் தீபமாகும். எல்லா தீபங்களிலிருந்தும் ஔிக்கற்றை ஔி சுடர் வரலாம். நல்லதொரு வெளிச்சத்தையும் அதற்கான சூழலையும் தரலாம். இருளை விலக்கலாம். ஆனால் அந்த செயலைத் தாண்டி ஆக்கப்பூர்வமான அதிர்வலைகள் எதில் இருக்கிறதோ அதை மனிதன் பின்பற்றினால் நல்ல பலன் உண்டு.
அந்த வகையில் பார்க்கும்பொழுது நெய் தீபத்திற்கு அந்த சக்தி உண்டு. எள் எண்ணெய் எனப்படும் நல்லெண்ணெய் தீபத்திற்கு அந்த ஆற்றல் உண்டு. இலுப்ப எண்ணெய்க்கு அந்த ஆற்றல் உண்டு. மற்ற எண்ணெய்களுக்கு அந்த ஆற்றல் இல்லாமல் இல்லை. ஆற்றலின் சக்தி சற்றே குறைந்திருக்கும். சில வகையான தீபங்களை சில குறிப்பிட்ட பூஜைகளை முன்னிட்டு ஏற்ற வேண்டுமே தவிர பொதுவில் ஏற்றுவது சிறப்பை தராது. இது மட்டுமல்லாது காலகாலம் மனிதன் எத்தனையோ புதிதாக கற்று செயல்படுத்த துவங்கிவிட்டான். அந்த வகையில் நெய் தீபமோ அல்லது எண்ணெய் தீபமோ இல்லாமல் திரியில்லாமல் எரியக்கூடிய தீபங்களையெல்லாம் (மின்சார விளக்கு) இறைவன் அருளால் கண்டுபிடித்துவிட்டான். இருந்தாலும் அவைகள் வெறும் உலகியல் வாழ்விற்கு உதவலாம். அதிலிருந்து வரக்கூடிய அதிர்வலைகள் கட்டாயம் மனிதனுக்கு ஆன்மீக முன்னேற்றத்தை தருவதாக இராது (இருக்காது). அதுமட்டுமல்லாது பூமியில் கிடைக்கக்கூடிய பொருள்களை விதவிதமாக சேர்த்துதான் மனிதன் புதிய விஷயங்களையும் புதிய கருவிகளையும் கண்டுபிடிக்க கற்கிறான். பூமியில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்கினால்தான் அது அவன் அறிவு திறமைக்கு சான்றாகும். ஆனால் மனிதன் கண்டுபிடித்த எந்த ஒரு பொருளுக்குப் பின்னாலும் இறைவன் ஏற்கனவே தந்த அடிப்படை பொருள் இருக்கும்.
அந்த வகையிலே அது சிறப்பான பலனை எந்த அளவிற்கு தரும் என்று பார்த்தால் உலகியல் சார்ந்த விஷயங்களுக்கு அது உதவலாம். அதே சமயம் உண்மையான மெய்யான மெய் உணர்வை பெற வேண்டுமென்றால் ஆதி காலம் முதல் இருக்கக்கூடிய கண்டு பிடிக்கக்கூடிய மண் அகல் தீபம் பசு நெய் தீபம் மண் அகலில் தூய எள் எண்ணெய் தீபம் – இவற்றை ஏற்றுவது சிறப்பான பலனைத் தரும். அதோடு மட்டுமல்லாமல் உடலில் இருக்கக்கூடிய தீய கழிவுப் பொருள்களை வெளியேற்றுவதில் இதுபோன்ற தீப சுடர்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. இறைவனை ஒருவன் நம்பாமல் இருக்கட்டும். பக்தி இல்லாமல் இருக்கட்டும். பயத்தின் காரணமாகவோ அல்லது பக்தியின் காரணமாகவோ ஆலயம் சென்று வணங்கினால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையினாலோ கூட்டம் கூட்டமாக குறிப்பிட்ட தினங்களில் ஆலயத்தை நோக்கி செல்கிறான். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வழக்கத்திற்கு அதிகமான மனித கூட்டம் சேரும் பொழுது சுவாசிக்க தூய்மையான காற்று கிடைப்பது கடினமாகிறது. எப்பொழுதுமே இறைவன் படைப்பு நுட்பமானது. இங்கே மனிதனுக்கு தேவையான உயிர்சக்தியை தரக்கூடிய பிராணவாயுவின் சதவிகிதம் காற்றில் குறைவு. ஆனால் அதற்கு எதிராக தளர்வையும் அயர்வையும் மயக்கத்தையும் தரக்கூடிய எதிர்தன்மை கொண்ட வாயுவின் தன்மை அதிகம்.
இந்த நிலையில் தீபத்தை ஏற்றினால் அந்த தீப சுடர் எரிவதற்கும் மேலும் பிராண வாயு தேவைப்படும் பட்சத்தில் இன்னும் பிராண வாயு சக்தி குறையுமே? இப்படியிருக்கும் பட்சத்தில் பிராணவாயு பற்றாக்குறையை எவ்வாறு சரி செய்வது? கட்டாயம் பசு நெய் தீபம் நூற்றுக்கு நூறு சரி செய்யும். அடுத்ததாக விண்வெளியில் உள்ள அசுத்தங்களை சரி செய்யும். அந்தப் பகுதியில் உள்ள எதிர்மறை எண்ணங்களையும் சரி செய்யும். அடுத்த நிலையில் எள் எண்ணெய் தீபமும் இவ்வாறு சரி செய்யும். எனவே இப்படி உடல் சார்ந்த ஆரோக்கியத்திற்கும் உள்ளம் சார்ந்த ஆன்மீகத்திற்கும் தீப வழிபாடு நல்ல பலனைத் தரும். பக்தியோடு வேறு புற சிந்தனைகள் இல்லாமல் இறைவனை மனதார ஒன்றுபட்ட எண்ணத்தோடு எண்ணி தீபத்தை ஏற்றி வணங்கி வந்தால் கட்டாயம் உடலுக்கும் நன்மை உண்டு உள்ளத்திற்கும் நன்மை உண்டு. அதற்காக ஆலயத்திலே தற்காலத்திலே உள்ள மின்சார விளக்குகளை பொருத்த வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. ஆலயத்திற்கோ அல்லது வேறு சேவை செய்யும் அமைப்புக்கோ மின்சார விளக்குகளை பொருத்த ஒரு மனிதன் உதவினாலும் அதுவும் அவனுக்கு புண்ணிய பலனையே தரும்.