கேள்வி: மனிதர்களின் கர்ம வினைகளுக்கு முடிவே இல்லையா?
ஒரு மனிதனை பார்த்து பல்வேறு பிறவிகள் எடுத்து பல்வேறு பாவங்களை செய்திருக்கிறாய். சில புண்ணியங்களையும் சேர்த்திருக்கிறாய். அந்த புண்ணியத்தையெல்லாம் கணக்கில் கொண்டு நடப்பு பிறவியில் இறைவன் உனக்கு பாவம் புண்ணியம் நவக்கிரகம் இறைவன் பிறவிகள் -இதுபோன்ற விஷயத்தை ஞானத்தை அளிக்க முன் வருகிறார். இந்த நிலையில் எடுத்த எடுப்பிலேயே சிறு வயதிலேயே ஒரு மனிதன் பார்த்து நீ எதுவும் செய்ய வேண்டாம். இந்த உலகம் மாயை. இங்கு வாழ்கின்ற வாழ்க்கை அர்த்தமற்றது. எனவே உடனடியாக நீ ஒரு குகைக்கு சென்றுவிடு. ஒரு மலையடிவாரம் சென்றுவிடு. ஒரு விருட்சத்தின் (மரத்தின்) அடியில் பத்மாசனமிட்டு அமர்ந்து உன் நெற்றி புருவத்தை கவனித்துக் கொண்டேயிரு. அப்பொழுது எல்லாம் புரியும் என்றால் அதை புரிந்து கொள்ளும் அளவிற்கு புண்ணிய பலம் எத்தனை மனிதர்களுக்கு இருக்கும்? இது எங்கனம் இருக்கிறது? என்றால் மிக உயர்ந்த கல்வி திட்டத்தை அடிப்படை கல்வி கற்கும் மாணவனுக்கு கொடுத்தால் குழந்தையாய் இருக்கும் மாணவனுக்கு கொடுத்தால் குழந்தையாய் இருக்கும் மாணவனால் கற்றுகொள்ள இயலுமா? அந்த வயதில் எந்த அளவு பாடதிட்டத்தைக் கொடுத்தால் ஏற்றுக்கொள்ள முடியுமோ அந்த பாடதிட்டத்தைத்தான் அவன் கற்றுக்கொள்ள முடியும். எனவே குண்டலினி யோகம் தியானம் ஞானம் தவம் தற்சோதனை இதுபோன்ற விஷயங்களுக்கெல்லாம் அடிப்படைதான் பக்தி மார்க்கம்.
இன்னொன்று இந்த பக்தி மார்க்கத்தில் தன்னை நன்றாக தோய்த்து தோய்த்து தோய்த்து ஆழ்ந்துவிட்டால் ஞான மார்க்கம் பிறர் போதிக்காமல் வரக்கூடும். ஆனால் ஞானமார்க்கத்தில் வந்துவிட்ட பிறகு பக்தி மார்க்கம் வேண்டுமென்றால் ஒரு மனிதன் அதற்கு முயற்சி செய்துதான் வர வேண்டும். பக்தி மார்க்கத்தின் வாயிலாக செய்யக்கூடிய புறசெயலை மட்டும் பார்க்கக்கூடாது. அதாவது பாலை விக்ரஹத்தின் மீது ஊற்றுவதாலோ தீபத்தை ஏற்றுவதாலோ நறுமணம் கமழும் புகையை தூவுவதாலோ இறைவன் மகிழ்கிறாரா? பாவம் குறைகிறதா? என்று வெளிப்படையான அறிவுத் தன்மையைக் கொண்டு புரிந்து கொள்ளக் கூடாது.
பிறந்த குழந்தை நகை கேட்கிறதா? புத்தம் புதிய ஆடை கேட்கிறதா? ஆனால் அவற்றையெல்லாம் தாயும் தந்தையும் குழந்தைக்கு அணிவித்து பார்த்து சந்தோசப்படுகிறார்களே? அதைப் போல் பக்தியில் தோய்ந்த பக்தனுக்கு இறைவனை விதவிதமாக அலங்காரம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம். எப்படி மனிதன் தன்னை பார்க்க விரும்புகிறானோ அப்படி இறைவன் தன்னை ஆட்படுத்திக் கொள்கிறான். எப்படி குழந்தைக்கு தகுந்தாற் போல் பெரியவர்கள் தம்மை வளைத்துக் கொள்கிறார்களோ அதைப் போலத்தான் பக்தியின் வாயிலாக செய்யப்படும் சில சடங்குகள் அறிவுக்கு அர்த்தமற்றது போல் தோன்றினாலும் அந்த பக்தியை செலுத்துகின்ற மனிதனின் மனோநிலைக்கு ஏற்புடையதாக இருப்பதால் அவன் மனதிலே எந்தவிதமான தீய எண்ணங்களும் இல்லாமல் தூய எண்ணத்தோடு இதை செய்தால் இறைவனுக்கு பிடிக்கும் என்று எண்ணி அந்த நிலையில் அவன் செய்வதால் இறைவனின் அருள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இறைவனின் அருள் கிடைக்க கிடைக்க பின்னால் பக்குவமான பக்தியும் பிறகே பக்தி என்பது வெறும் புற சடங்கு இல்லை அகந்தை நன்றாக வைத்துக் கொள்வதில்தான் இருக்கிறது என்ற நிலை வரும். இப்படி கல்வி உயர் கல்வி உயர் உயர் கல்வி என்ற நிலைபோல் அவன் உயர்ந்து வருகிறான். எனவே அந்த ஆரம்ப நிலையில் தீபத்தை ஏற்றுவதும் நல்ல தெய்வீக சடங்குதான் அதனாலும் பாவங்கள் குறையும்.