கேள்வி: பக்குவத்தின் தன்மைக்கு ஒரு கதையைக் கூறி அருள வேண்டும்?
இறைவன் அருளாலே கதை எல்லாம் பின்னர் கூறுகிறோம். பக்குவம் என்பதே ஆகங்காரமற்ற ஒரு நிலைதான். தன்முனைப்பும் கடுமையான ஆணவமும் தான் என்கிற நினைவும் தன்னைப்பற்றி மிக உயர்வான மதிப்போ அல்லது தாழ்வான மதிப்போ வைக்கின்ற நிலையிலே ஒரு மனிதனால் பக்குவம் அடைவது என்பது கடினம். பக்குவத்தின் எல்லை இதுதான் என்று கூற இயலாது. ஒரு மனிதன் ஒரு நிலையில் தன்னுடைய லோகாய (உலக) எதிர்பார்ப்புகள் தடைபடும் என்றாலோ அல்லது லோகாய வெற்றிகள் கிட்டாமல் போய் விடும் என்றாலோ அனைத்து ஏளனங்களையும் அவமானங்களையும் சகித்துக் கொண்டு இருப்பது அவன் நிலைக்கு அல்லது ஒரு கோணத்தில் பக்குவமாக இருக்கலாம். ஆனால் எந்தவிதமான லோகாய (உலக) ஆதாயம் இல்லாத நிலையிலும் ஆன்மீக ஆதாயம் இல்லாத நிலையிலும் ஒரு மனிதன் பக்குவமாக இருப்பது அவசியம். ஒரு மனிதன் யாருக்காக இருக்கின்றானோ இல்லையோ தன்னை மனதளவில் சிந்தனையளவில் மேம்படுத்திக் கொண்டே இருத்தல் அவசியம். தான் உயர்வாக மேன்மையான நிலையில் நடந்து கொள்வதால் மற்ற மனிதர்கள் அதை புரிந்து கொள்வதில்லை. தான் உயர்வாக நடந்து கொள்கிறோம் என்பதை புரிந்தும் புரியாமலும் இருக்கிறார்கள். இன்னும் கூறப்போனால் மிக உயர்வாக மிக பெருந்தன்மையாக மிக தெளிவாக நடப்பதால் தன்னை மதிப்பதில்லை. எனவே நான் ஏன் அவ்வாறு நடக்க வேண்டும்? என்றெல்லாம் எண்ணிடாமல் தன்னுடைய ஆன்ம நலம் நன்றாக வேண்டும். ஆன்மீக மெய்ஞானம் முன்னேற்றம் வேண்டும் என்று ஒரு சரியான நோக்கிலே மனிதன் பக்குவம் பரிபக்குவம் பரிபரிபக்குவம் என்ற நிலையை அடையத்தான் வேண்டும்.
நூல்கள் ஓதுவதால் மட்டும் பக்குவ நிலை எய்திவிட முடியாது. தொடர்ந்து எம்போன்ற மகான்களின் வாசகங்களை கேட்பதால் மட்டும் அடைந்துவிட இயலாது. எல்லா நல்போதனைகளையும் மனதிலே வைத்துக் கொண்டு அன்றாடம் வாழ்விலே நடக்கின்ற சம்பவங்களின் பொழுது அதனை பொருத்திப் பார்த்து மனதிற்கு பயிற்சி தந்து மனதை மேம்பாடு என்ற நிலையை நோக்கி நகர்த்த வேண்டும். பிறர் வார்த்தைகளால் செய்கைகளால் ஏளனம் செய்யும் பொழுதும் தன்னையும் தன்னை சார்ந்த உறவுகளையும் தான் மதிக்கின்ற கருத்துக்களையும் தன்னுடைய உடைமைகளையும் எந்தவகையில் சேதப்படுத்தினாலும் பாதிப்பை ஏற்படுத்தினாலும் அப்பொழுதும் ஆடாது அசையாது நடுநிலையில் நிற்கப் பழக வேண்டும். ஆனால் இவையெல்லாம் ஏக (ஒரு) தினத்திலோ ஏக (ஒரு) பிறவியிலோ வந்துவிடாது. ஆயினும் இதை நோக்கி செல்லும் முயற்சியை ஒரு மனிதன் செய்யத்தான் வேண்டும். இவையெல்லாம் தனிமனித ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவுமே தவிர ஒட்டுமொத்த லோகாய சமுதாய வாழ்விற்கு இதனை அப்படியே நேருக்கு நேர் பொருள் கொண்டால் விளைவுகள் தீயதாகத்தான் இருக்கும். எனவே ஒட்டு மொத்த சமுதாய நலன் கருதி செய்கின்ற செயல்களும் சட்ட திட்டங்களும் வேறு. தனிமனித ஆன்மீக முன்னேற்றம் என்பது வேறு. எம்மைப் பொறுத்தவரை நாங்கள் கூறுகின்ற போதனைகள் ஒரு தனி மனித ஒழுக்கத்தைக் குறிக்கும் தனி மனித பாவ புண்ணியங்களை கணக்கிலே வைத்து பாவங்களைக் குறைத்து புண்ணியங்களை அருள் புண்ணியமாக மாற்றி அவன் தனக்குள் இருக்கின்ற ஆத்மாவை தான் யார் என்ற அளவிலே உணர்ந்து சதாசர்வகாலம் அவன் இறை ஞானத்திலே திளைத்திருக்க வேண்டும் என்பதற்காக கூறப்படுவது.