கேள்வி: நல்லதையே செய்ய வேண்டும் வழிகாட்டுங்கள்:
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் நலம் எண்ணி நலம் உரைத்து நலமே செய்ய நலமே நடக்குமப்பா. இப்படி கால காலம் மாந்தர்கள் வாழ்கின்ற வாழ்வு நிலை என்பது பிற மனிதர்கள் தன்னை மதிக்கும் வேண்டும் தன்னை துதிக்க வேண்டும் தன் செயலை பாராட்ட வேண்டும் தன்னுடைய மனநிலையை அறிந்து அதற்கு ஏற்றாற் போல் பிறர் நடக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பது பொதுவாக மனித இயல்பு. ஆனால் இவையெல்லாம் யாருக்கும் எந்த காலத்திலும் நூற்றுக்கு நூறு விழுக்காடு நடப்பதில்லை. ஒன்று ஒரு மனிதனின் பதவி செல்வம் செல்வாக்கு இதற்காகவோ அல்லது ஒரு மனிதனை அண்டிப் பிழைத்தால்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்ற நிலை இருக்கும் நிலையிலும் ஒரு வேளை ஒரு மனிதனை எதிர்த்துக் கொண்டால் அந்த மனிதனால் உயிருக்கோ உடைமைக்கோ ஆபத்து நேரும் என்பது போன்ற வெளிப்படையான துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என்ற நிர்பந்தம் இல்லாத நிலையில் எந்த மனிதனும் யாரையும் மதிக்கப் போவதில்லை. இதுதான் மனித இயல்பு. ஆனால் பரிபூரண அன்பு எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு தூய அன்பு இந்த அன்பு மட்டும் மனிதனிடம் மலர்ந்து விட்டால் அதன் பிறகு இவன் வேண்டியவன் இவன் உறவுக்காரன் இவன் நண்பன் இவன் எதிரி இவன் ஆண் இவள் பெண் என்கிற பேதங்கள் எல்லாம் அடிப்பட்டு போகும். அங்கே வெறும் ஆத்ம தரிசனம் மட்டுமே தெரியும். இறைவன் படைப்பில் நாம் எப்படி வந்திருக்கிறோமோ அதைப் போல அந்த ஆத்மாவும் வந்திருக்கிறது.
இந்த உலகம் நமக்கு மட்டுமல்ல இது இறைவன் படைத்தது. இங்குள்ள நீர் காற்று ஆகாயம் பூமி விருட்சங்கள் (மரங்கள்) பொதுவானது. நாம் எப்படி இந்த உலகிலே வாழ்வதற்கு வந்திருக்கிறோமோ அதைப் போலத்தான் பிற உயிர்களும் வந்திருக்கிறது என்ற எண்ணம் வந்துவிட்டாலே யார் மீதும் சினம் ஆத்திரம் பொறாமை எழாது. அனைவரும் நம்மைப் போன்ற உணர்வுள்ள மனிதர்கள் என்று எண்ணிவிட்டாலே அங்கே நன்மைகள் நடந்து கொண்டே இருக்கும். எனவே இந்த உண்மையை புரிந்து கொண்டால் மனித நேயம் வளரும் பலப்படும். அங்கே நற்செயல்கள் அதிகமாகும். நற்செயல்கள் அதிகமாக அதிகமாக அங்கே நல்லதொரு சமூக மனித இணைப்பும் பிணைப்பும் உருவாகும். அப்படிபட்ட ஒரு உயர்ந்த உச்சகட்ட சமூக நலத்திலே பிறக்கின்ற குழந்தைகளும் உயர்வாகவே இருக்கும். ஆனால் சதா சர்வகாலமும் கோபமும் எரிச்சலும் மன உலைச்சலும் பிறர் மீது பொறாமையும் குற்றச் சாட்டுகளும் கொண்டு யார் வாழ்ந்தாலும் இந்த எண்ணப்பதிவு வாரிசுக்காக வாரிசு தோறும் வாரிசின் வழியாக வம்சாவழியாக கடத்தப்பட்டு தீய பதிவுகள் எங்கெங்கும் ஆட்கொண்டு அந்த தீய பதிவுகள் எல்லா மனத்திலும் நுழைந்து தவறான செய்கைகளை ஊக்குவித்துக் கொண்டே இருக்கும். எனவேதான் நல்லதை எண்ணி நல்லதை உரைத்து நல்லதையே செய்ய வேண்டும் என்று யாம் எம்மை நாடுகின்ற மாந்தர்களுக்கு என்றென்றும் கூறிக்கொண்டே இருக்கிறோமப்பா.