கேள்வி: மெய் தீர்த்தம் பற்றிய விளக்கம்
இடைவிடாத பிராத்தனைகள் சாத்வீக எண்ணங்கள் சதாசர்வ காலம் தர்ம சிந்தனை இந்த வாழ்வை நடத்த கர்மாக்கள் குறையுமப்பா. இந்த சினம் விரக்தி தளர்வு பிறரை பிறரோடு ஒப்பிட்டுக் கூறுதல் ஒரு மனிதன் இல்லாத போது அவரைப் பற்றி விமர்சனம் செய்தல் காழ்ப்பு உணர்ச்சி இன்னும் இத்யாதி இத்யாதிகளை எல்லாம் தள்ளத்தான் மனிதன் மா மனிதன் ஆகிறான். இந்த ஒரு பயணம் செய்யும் பொழுது இறை நாமமும் பிராத்தனையும் செய்து கொண்டு செல்வது நலம். வீண் விவாதங்களும் பிரச்சனைக்குரிய செயல்களும் வாக்குகளும் வேண்டாம். இந்த ஒவ்வொரு துளியும் புவி சுழுன்று சுழன்று காலத்தை மனிதனுக்கு அறிவுறுத்துவது இறை நோக்கி செல் இறை நோக்கி செல் இறை நோக்கி செல் என்பதுதான். ஒரு பிறவியில் விட்டுவிட்டால் எப்பிறவியில்? என்பதை மனிதனால் நிர்ணயிக்க முடியாது. விலங்குகளுக்கு கிடைக்காத பாக்கியம் மனிதனுக்கு இறை தந்திருப்பது இறையின் கருணை. விங்குகளும் உண்ணுகின்றன. மனிதனும் உண்ணுகிறான். விலங்குகளும் தன் இனத்தை விருத்தி செய்கின்றன. மனிதனும் செய்கிறான். பின் எதில்தான் வேறுபாட்டைக் காட்டுவது? என்றால் விலங்குகள் குகைக்குள் வாழ்கின்றன. மனிதன் தனக்குக் கொடுத்த அறிவைக் கொண்டு குகையை வடிவமைக்கக் கற்றுக் கொண்டு விட்டான். எனவே மனதை தூய கருவறையாக்கி உடலை ஆலயமாக்கி மனதுக்குள் சதா இறைவனை அமர்த்த போட்டியிட வேண்டும். எங்கு சென்று அமர்வது? என்று தெரியாமல் இறை திணற வேண்டும். அந்த அளவுக்கு மனம் புத்தி செயல் எண்ணம் வாக்கு புனிதமாக இருக்க வேண்டும். எனவே சண்டையில் சச்சரவில் மனதை செல்ல விடாமல் அவரவர் தொண்டையில் சுரக்கும் தீர்த்தத்தை உணர்ந்தால் அதுவே சுய தீர்த்தம் மெய் தீர்த்தம்.