கேள்வி: லலிதா சகஸ்ரநாமம் லலிதா நவரத்ன மாலை பற்றி:
நீ எந்த லலிதா சஹஸ்ரநாமத்தை பற்றி சொல்லுகிறாய்?
பதில்: நீங்கள் (அகத்திய மாமுனிவர்) ஹயக்ரீவரிடமிருந்து உபதேசமாக பெற்ற லலிதா சஹஸ்ரநாமத்தை பற்றி.
அதை தொடர்ந்து ஓத வேண்டும். படிக்கக் கூடாது. ஓதும் போது இரு கண்களில் இருந்தும் நீர் வர வேண்டும். ஓத ஓதத்தான் இது போன்ற பாடல்கள் தேவார திருவாசகங்களில் உள்ள அற்புதமான விஷயங்கள் தெரியவரும். அவற்றை ஒரு வரியிலோ ஒரு வார்த்தையிலோ கூற இயலாது. ஏனென்றால் அதில் உள்ள பல விஷயங்கள் முரண்பாடாக மனிதனுக்குத் தோன்றும். இறைவன் அருளால் சொல்வது என்னவென்றால் இதனை 1 அல்லது 3 அல்லது 5 மண்டலம் பிராத்தனையாகவோ யாகமாகவோ ஆலயத்திலோ இல்லத்திலோ அதிகாலை துவங்கி பூர்த்தி செய்வது பல்வேறு பிறவிகளில் செய்த பிரம்மஹத்தி தோஷத்தை அகற்றும் அப்பா. இது பக்தி வழி.
யோக மார்க்கம் என்று எடுத்துக் கொண்டால் குண்டலினி சக்தியை மேலே எழுப்புவதற்கு சரியான உச்சரிப்பைக் கற்றுக் கொண்டு மனதை ஒரு நிலைப்படுத்தி அதிகாலைப் பொழுதில் வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து நித்தமும் உச்சரித்து வந்தால் மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சர்ப்பமானது (பாம்பு) எழுவதை உணரலாம். எனவே எல்லா வகை மந்திரங்களும் மனித உடலின் 72000 நாடி நரம்புகளின் ரத்த ஓட்டத்தை சரி செய்வதும் அவனின் உள்முக சக்தியையும் தட்டி எழுப்பும் அப்பா.
கேள்வி: பெருமாள் கோவில் (திருநெல்வேலி) தைலக்கிணறு பற்றி:
மருத்துவ குணம் வாய்ந்தது. பல ஆலயங்களிலே மூல விக்ரகங்கள் சந்திரக் காந்தக்கல் சூரிய காந்தக்கல் கந்தகம் இன்னும் பல அபூர்வ வகை கற்களால் செய்யப்பட்டிருப்பதால் அதன் அபிஷேக தீர்த்தம் பால் தேன் ஆகியவற்றை பருகினால் தேகம் ஆரோக்கியம் ஆகும். ஆனால் மூல ஸ்தானத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் அபிஷேகம் செல்லும் தாரையையும் சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் அசுத்தமாக வைத்து விட்டு அவற்றால் பலன் இல்லை என்றால் அது யார் பொறுப்பு?. இவற்றை எல்லாம் சித்தனா வந்து சுத்தம் செய்ய முடியும்?. எனவே சுத்தமாக வைத்துக் கொண்டு பாரம்பரியமாக செய்யப்படும் வழிமுறைகளை பின்பற்றினால் கட்டாயம் நல்ல பலன் உண்டு.