கேள்வி: ருத்ராட்ச மாலையை கையாளும் முறை பற்றி:
இந்தக் கேள்வி கேட்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் மாலையில் சில மணித்துளிகள் கூட்டு ஜப பிராத்தனை நடந்து இருந்தது.
புற பூஜைகளில் நாங்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. வாய் வழியாக பஞ்சாட்சரத்தை உச்சரித்த போது எத்தனை பேர் மனதிலே அந்த முக்கண்ணனின் (ஈசன்) உருவம் பதிந்து இருந்தது? என்று பார்த்தால் மிகவும் குறைவுதான். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல்வேறு சிந்தனைகள். இருக்கலாமா? போகலாமா? இருந்தால் என்ன நடக்கும்? எவ்வளவு நாழிகை ஆகும்? பிறகு நடுநிசி (நடுஇரவு) ஆகிவிட்டால் என்ன செய்வது? பிறகு சென்றால் ஏதாவது குற்றமாகிவிடுமா? அல்லது இங்கு இருந்து வாக்கினை(சத்சங்கத்தில் ஜீவநாடி பொதுவாக்கு) கேட்டுவிட்டு செல்லலாமா? என்ன செய்வது? என்ற குழப்பமான மனநிலையில்தான் பலர் உள்ளார்கள். பல்வேறு சிந்தனைகள் பலருக்கும். இவற்றை நாங்கள் குறையாகக் கூறவில்லை. பூஜை செய்வதை நாங்கள் குறையாக சொல்லவில்லை. ஆயினும் முறையாக பூஜை செய்த எத்தனை பேர் இறைவனை அடைந்து இருக்கிறார்கள்? (மிக மிகக்குறைவுதான்). ஏன் என்றால் அங்கு வெறும் முறை மட்டும்தான் இருந்து இருக்கும். மீதி எல்லாம் குறையாக இருக்கும். முறையற்று பூஜை என்றால் என்ன என்றே தெரியாத பாமரத்தனமான பூஜைதான் இறையை கவர்ந்து இருக்கிறது. எனவே இது போன்ற (ருத்ராட்ச மாலையை மேலிருந்து கீழாக உருட்டுவதா? அல்லது கீழிருந்து மேலாக உருட்டுவதா?) விஷயங்களில் அர்த்தமே இல்லை என்று எண்ண வேண்டாம். இதன் மூலம் இரத்த ஓட்டமும் நரம்பு ஓட்டமும் மாறும்.
கேள்வி: ஸ்தல விருட்சம் (மரம்) பற்றி:
விருட்சங்களுக்கு என்று சில வகையான பூஜை முறைகள் உண்டு. விருட்சங்களுக்கு திருமண பந்தம் கூட செய்து வைப்பார்கள். நட்சத்திரங்களுக்கு உரிய மரங்களை மட்டும்தான் வளர்க்க வேண்டும் பூஜிக்க வேண்டும் என்றில்லை. எல்லாவற்றையும் வளர்க்க வேண்டும். ஏனென்றால் மரங்கள் தூரத்தில் உள்ள மரங்களோடு பேசும். அது மட்டுமல்லாது ஒரு மரமானது எத்தனையோ உயிர்களுக்கு நிழலை காயை கனியை உறைவிடத்தை தருகிறது. பலவற்றை மரம் தருவதால் அதற்கு தரு என்ற ஒரு பெயர் உண்டு. கற்பக விருட்சம் என்று ஒவ்வொரு மரத்தையுமே கூறலாம். அது மட்டுமல்லாது ஒவ்வொ மரமும் மனிதனை விட பல மடங்கு மேம்பட்டது. அவை பாவம் செய்வது கிடையாது. எனவே மரங்கள் அனைத்துமே போற்றப்பட வேண்டியவை என்பதால்தான் வேதங்களில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. ஸ்தல விருட்சம் என்று வைத்து ஒவ்வொரு ஆலயத்திலும் பராமரிக்கப்படுகிறது. அந்த விருட்சம் அந்த மண்ணிற்கு ஏற்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.