கேள்வி: பித்ருக்களுக்கு திலதர்ப்பணம் செய்யும் முறை பற்றி:
தெய்வ சமுத்திரக் கோட்டம் எனப்படும் இராமேஸ்வரம் சென்று அது ஏனோ தானோ என்று இருந்தாலும் ஒரு முறை செய்துவிட்டு பிறகு அங்கு முடிந்தவரை ஏழைகளுக்கு உதவி செய்துவிட்டு இறைவனுக்கு வழிபாடுகள் செய்து விட்டு தீபங்களும் ஏற்றி விட்டு பிறகு அமைதியாக அவரவர் இல்லத்திற்கு வந்து கூட பித்ரு சாப நிவர்த்தி பூஜையை செய்து கொள்ளலாம். தில தர்ப்பணம் என்றால் எள்தான் பயன்படுத்த வேண்டும் என்பது இல்லை. மற்ற யாகங்களைப் போல் சகல பொருள்களை பயன்படுத்தியும் செய்யலாம். முதலில் வழக்கம் போல் கணபதி யாகம் குல தெய்வ யாகம் செய்து விட்டு நவகிரக யாகம் நரசிம்மர் யாகம் சுதர்சனர் யாகம் சரபேஸ்வரர் யாகம் துர்கை யாகம் செய்து விட்டு நவகிரகங்களின் அதி தேவதைகளுக்கும் பூஜை செய்து பிறகு இறுதியாக எந்த இல்லத்திற்காக இது நடத்தப்படுகிறதோ அவர்களுக்குத் தெரிந்த முன்னோர்களின் பெயரை எல்லாம் கூறி (இதில் கூட எமக்கு முழுமையான உடன்பாடு இல்லை. ஏன் என்றால் பெயர் என்பது உடலுக்கு இடப்படுவது தான். என்றாலும் அப்போது வாழ்கின்ற மனிதர்கள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் நாமாவளி) மானசீகமாகவோ அல்லது வாய்விட்டோ எங்கள் குடும்பத்தில் இதற்கு முன்பு வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் இன்று எந்த நிலையில் இருந்தாலும் இன்று யாங்கள் செய்கின்ற யாகம் பூஜை மற்றும் தர்ம பலனால் இந்த பலனின் எதிரொலியால் இறைவனின் அருளால் பித்ரு தேவதைகள் இந்த பலனை எடுத்து அவர்களுக்கும் பயன்படுத்தி அதன் மூலம் அவர்களின் நிலை மாறி நற்கதியும் சற்கதியும் அடைவதற்கு இந்த பூஜையை பயன்படுத்தி கொள்ளுமாறு இறையிடமும் ஏனைய தேவதைகளிடமும் மனதார பிராத்தனை செய்து கொள்கிறோம் என்ற கருத்து வருமாறு வாசகங்களை அமைத்து கொள்ள வேண்டும்.
பித்ரு தோஷ நிவர்த்தி பூஜையில் அதாவது தில யாகத்திலே மிகச்சிறப்பே கோ (பசு) தானம் தான். தானங்கள் 32 க்கும் மேற்பட்டு உள்ளன. கோ தானம் சுவர்ண தானம் வெள்ளி தானம் அன்ன தானம் என்று விதவிதமான தானங்கள் உள்ளன. ஆனால் அனைவராலும் இவைகளை செய்ய முடியாது. வாய்ப்பு இருப்பவர்கள் செய்யலாம். வாய்ப்பு இல்லாதவர்கள் பசுவிற்கு ஒரு வேளை உணவாவது கொடுக்க வேண்டும். பிறகு ஆலயம் சென்று முடிந்த பூஜைகள் செய்து மோட்ச தீபம் ஏற்றி அந்த பரிகாரத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். தில தர்ப்பணத்தை புண்ணிய நதிக்கரையிலோ புண்ணிய கடற்கரையிலோ செய்யும் பொழுது கூறுகின்ற மந்திரங்களின் சக்தி பல மடங்கு அதிகரிக்கும். அது மட்டும் அல்லாது எல்லோருடைய இல்லமும் புனிதமானதாக இராது. தோஷங்கள் நிறைந்ததாக இருக்கும். அப்படி தோஷமுள்ள வீடுகளில் பூஜை செய்தால் அதன் பலன் குறைவு. அதனால்தான் ஆத்ம பலம் தெய்வ பலம் உள்ள சேத்திரங்களை முன்னோர்கள் கூறி வைத்தார்கள்.