ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 176

கேள்வி: மோட்ச தீபம் ஏற்றும் வழி:

தேவையானவை:

  1. வாழை இலை
  2. பச்சை கற்பூரம்
  3. சீரகம்
  4. பருத்தி கொட்டை
  5. கல் உப்பு
  6. மிளகு
  7. நவ தானியம்
  8. கோதுமை
  9. நெல் (அவிக்காதது)
  10. முழு துவரை
  11. முழு பச்சை பயறு
  12. கொண்டை கடலை
  13. மஞ்சள் (ஹைபிரிட் இல்லாதது)
  14. முழு வெள்ளை மொச்சை
  15. கருப்பு எள்
  16. முழு கொள்ளு
  17. முழு கருப்பு உளுந்து
  18. விளக்கு (200 மில்லி கொள்ளளவு) – 42 விளக்குகள்
  19. தூய பருத்தி துணி (கை குட்டை அளவு) – 21
  20. சுத்தமான நெய்

விளக்கு ஏற்றும் முறை:

எல்லா பொருள்களையும் சுத்தமான நீரில் கழுவி (உப்பு உட்பட பூ தவிர) நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும். துணியினையும் சுத்தமாக துவைத்து மஞ்சளில் நினைத்து காய வைக்க வேண்டும். தீபம் ஏற்ற உகந்த நேரம் மாலை ஆறு மணி. எல்லா விளக்குகளையும் நன்றாக கழுவி நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும். மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஆலயத்தில் தீபம் ஏற்றுகிறோமோ அந்த ஆலயத்தில் முன்பாகவே முறைப்படி அனுமதி பெற வேண்டும். எந்த ஆலயத்தில் வேண்டுமானாலும் ஏற்றலாம். முடிந்த வரை ஈசானிய மூலையில் (வடகிழக்கு) நன்கு உயர்ந்த இடத்தில் ஏற்றுவது சிறப்பு. முதலில் திரி தயாரிக்க வேண்டும். நல்ல சுத்தமான பருத்தி துணியில் பச்சை கற்பூரம் கருப்பு எள் சீரகம் பருத்தி கொட்டை கல் உப்பு மிளகு ஆகியவற்றை முடிச்சு போட்டு கொள்ள வேண்டும். இந்த முடிச்சின் மறுமுனைதான் நமக்கு திரியாக பயன்பட போகிறது. ஆலயத்தில் இதற்கு என்று தேர்வு செய்யப்பட்ட இடத்தில் தலை வாழை இலையினை வைக்க வேண்டும். அதன் மேல் நவ தானியங்களை பரப்ப வேண்டும். பிறகு 21 விளக்குகளையும் தனித்தனியாக வைத்து அதனுள் எள் நிரப்ப வேண்டும். அதன் மேல் ஒவ்வொரு விளக்குக்கும் ஒரு விளக்காக மீதம் உள்ள விளக்குகளையும் வைக்க வேண்டும். நெய் நன்றாக நிரப்பப்பட வேண்டும். பின்னர் முன் செய்த திரியினை இதனுள் நன்றாக நனைக்க வேண்டும். சரியாக நடுவில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

தீபம் மேல் நோக்கி மட்டுமே எரிய வேண்டும் (எந்த திசை பார்த்தும் இருக்க கூடாது). பார்ப்பதற்கு லிங்கம் போல் காட்சி கிடைக்கும். பிறகு பஞ்சாட்சர மந்திரத்தை (நமசிவய) குறைந்தது நூற்றி எட்டு முறை ஜபிக்க வேண்டும். (விஷ்ணு ஆலயமாக இருந்தால் அஷ்டாட்சர மந்திரம்). இறுதியாக இறைவனிடம் இப்பூவுலகில் பிறந்து இறந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இந்த பூஜா பலனை சமர்ப்பிக்கிறோம். இந்த பலனால் அந்த ஆன்மாக்கள் நற்கதி சற்கதி அடைய பிராத்தனை செய்கிறோம். மேலும் இந்த பூஜையை செய்வதும் செய்ய வைப்பதும் இறைவனும் சித்தர்களுமே. நாங்கள் வெறும் கருவிகளே என்று பிராத்தனை செய்ய வேண்டும். இவ்வாறு பூஜை செய்வதோடு நிறைவு பெறுவது இல்லை. மறுநாள் நாம் பூஜை செய்த விளக்குகள் (இலை நவ தானியம் உட்பட) ஒரு துளி கூட சிந்தாமல் அனைத்து பொருட்களையும் நதியில் சேர்த்து விட வேண்டும் இது கட்டாயம். ஏனென்றால் ஒவ்வொரு பொருளும் ஏன் ஒவ்வொரு எள்ளும் கூட ஒரு ஆத்மா. ஆதலால் நதியில் சேர்த்து விட வேண்டும். கண்டிப்பாக முறையாக அனுமதி பெற்று தான் தீபம் ஏற்ற பட வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.