இறை அணியப்பா என்ற தலைப்பில் அகத்திய மாமுனிவரின் பாடல்:
அகத்திய மாமுனிவர் வாக்கு:
அந்த இறையை நீ உள்ளத்தில் அணியப்பா.
இறையணி அணியத்தான் நிறையணியாகும் வாழ்வப்பா.
இயம்புங்கால் எமை நாடும் மாந்தர்கள் அனைவரும் ஓரணியில் இருக்க வேண்டும் என்பதற்காக யாமும் வாக்கை சீராக்கி
உயர்வணி ஆக்கி
நல்வித சொல் அணி ஆக்கி
அவையணி ஆக்கி
உயர் தமிழ் அணி ஆக்கி
நல்விதமாய் அணி அணியாய் வாக்கை அவ்வப்போது பகரணியாக்கி உரையணியாக்கி
சொல்லணியில் சொல்லுங்கால்
அவ்வணியை எல்லாம் செவியணியில் ஏற்று
சிந்தனை அணியில் வைத்து
சொல்லணியில் மீண்டும் செயல்படுத்தி செயலணி ஆக்கிவிட்டால்
யாம் உரைத்த வாக்கணிக்கு உயர்வான மதிப்பணி ஆகுமப்பா
அப்பனே செய்யாது ஒரு செவியணியில் ஏற்று அதை மறு செவியணியில் விட்டுவிட்டால் எமது வாக்கு மதிப்பணி எப்படி ஆகுமப்பா? இவையெல்லாம் வாக்கணியா?
சித்தர்களின் போக்கணியா?
இவையெல்லாம் நான் நம்பமாட்டேன். இதனை என் மதியணி ஏற்காது.
எல்லாம் விதியணி என்றால் எதற்கு இவர்கள் முன் அமர்ந்து அணியணியாக கூறுகின்ற வாக்கைஎல்லாம் கேட்க வேண்டும்?
அங்கே தீப அணி ஏற்றச் சொல்கிறார்கள். பிறகு தர்ம அணி செய்யச் சொல்கிறார்கள்.
இவற்றை எல்லாம் செய்வதற்கு தன அணி வேண்டாமா? என்று கேட்டால்
அதற்கும் கர்ம அணி என்றுதான் கூறுகிறார்கள்.
கர்ம அணியை நீக்க தர்ம அணிதான் தேவை என்றால் தன அணி எப்போது வரும்? என்று எம்முன்னே வினவி
அந்த தன அணி தராவிட்டால் தர்ம அணி செய்ய முடியாது என்று வாது செய்கிறார்கள் என்றாலும்
பொல்லா அணி எல்லாம் மனிதனை விட்டு நீங்கி
நல்ல அணி எல்லாம் மனதில் வைத்துவிட்டு
இம்சை அணியும் வேதனை அணியும் விட்டுவிட்டு
அவன் தாய் அணி போல் எம்மை அணுகும் போது
அவன் கர்ம அணியைக் கழிப்பதோடு
அவனுக்கு தர்ம அணியின் வழியையும் காட்டி அவன் உயர் கர்ம அணியை தொடர்ந்து செய்து
இறை அணியிலே அவனும் ஒரு அணியாக இருப்பதற்கு வழியைக் காட்டி
எம்முன்னே இன்னும் பேத அணி கொள்ளாமல்
அனைவரும் ஓரணியாக நின்றால்தான்
நாங்களும் இறையணியைக் காட்டித் தருவோம்.
எனவே இந்த நல் அணியை செவி அணியிலே ஏற்றி
சிந்தை அணியில் வைத்து இறைவன் திருவடியை சிந்திக்க பல்வேறு வாக்கனிகள்
வாக் கனிகளாய் இனி மலருமப்பா.
அணி என்ற வார்த்தையை வைத்து தமிழில் அகத்தியர் விளையாடி பொது வாக்கு அருளியிருக்கிறார். இதற்கான பொருளை பலரால் புரிந்து கொள்ள இயலாது என்ற காரணத்தால் இந்த அகத்தியரின் வாக்கின் விளக்கத்தை கீழே கொடுத்திருக்கிறோம்.
இறையை நீ உள்ளத்தில் வீற்றிருக்க வையுங்கள். இறைவனின் திருவடிகளை உள்ளத்திற்குள் வைத்தால் தான் முழுமை பெற்றதாகும் வாழ்வப்பா. எடுத்து சொல்லும் போது எமை தேடி வரும் மனிதர்கள் அனைவரும் ஓரே கூட்டமாக இறைவனைத் தேடும் ஒரே இனமாக இருக்க வேண்டும் என்பதற்காக யாமும் வாக்கை சீராக்கி உயர்வான தத்துவங்கள் ஆக்கி நல்லவிதமாக சொற்களை சொல்லுகின்ற தத்துவமாக அவற்றை ஒழுங்கு படுத்திக் கொடுத்து உயர்வான தமிழ் மொழிக்கு அணிகலன்களாக அழகு படுத்துவதாக நல்விதமான வரிசை வரிசையாய் வாக்கை அவ்வப்போது சொல்லப்படுகின்ற சொல் தொடர்களாக்கி அதை அப்படியே வரிசைப்படி இங்கே உங்களுக்கு உரைக்கின்றோம். அதை அழகான சொற்களாக்கி சொல்லும் பொழுது அந்த அழகான சொற்களை எல்லாம் ஆபரணங்களை சூடியிருக்கும் காதுகளில் கேட்டுக் கொண்டு அவற்றை உங்களின் சிந்தை என்கிற பெட்டகத்தில் வைத்துக் கொண்டு நீங்கள் சொல்லுகின்ற வார்த்தைகளிலும் மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லி அதை அப்படியே செயல் படுத்துகின்ற காரியங்களின் ஒழுங்காக ஆக்கிவிட்டால் யாம் உரைத்த வாக்குகளின் அமைப்புக்கு மிகவும் உயர்வான மதிப்பைக் கொடுத்து அழகுபடுத்தியது போல் ஆகுமப்பா.
அப்பனே யாம் சொல்வதை ஆபரணங்களை சூடியிருக்கும் காதுகளில் கேட்டுக் கொண்டு அதை இன்னொரு காது வழியாக விட்டுவிட்டால் எமது வாக்கை நீங்கள் மதிப்பைக் கொடுத்து அழகுபடுத்தியது போல் என்று எப்படி ஆகுமப்பா? இவையெல்லாம் வாக்குக்கு அழகா? சித்தர்களின் போக்குக்கு அழகா? இவையெல்லாம் நான் நம்பமாட்டேன். இதனை என் சிந்தனை அழகாக ஏற்காது. எல்லாம் விதியின் வழியே என்றால் எதற்கு இவர்கள் முன் அமர்ந்து வரிசை வரிசையாக கூறுகின்ற வாக்கை எல்லாம் ஏன் கேட்க வேண்டும்? அங்கே தீபத்தை அழகாக ஏற்றச் சொல்கிறார்கள். பிறகு தர்மங்களை வரிசையாக செய்யச் சொல்கிறார்கள். இவற்றை எல்லாம் செய்வதற்கு செல்வங்களும் வரிசையாக இருக்க வேண்டாமா? என்று கேட்டால் அதற்கும் கர்மங்களே வரிசையாக இருக்கின்றது என்று தான் கூறுகிறார்கள். கர்மங்களின் வரிசையை நீக்க தர்மங்களை வரிசையாக செய்வது தான் தேவை என்றால் செல்வங்களின் வரிசை எப்போது வரும்? என்று எம் முன்னே கேட்டு அந்த செல்வ வரிசையை தரா விட்டால் தர்மங்களை வரிசையாக செய்ய முடியாது என்று வாதம் செய்கிறார்கள் என்றாலும் தீமையான செயல்கள் எல்லாம் மனிதனை விட்டு நீங்கி நல்ல செயல்கள் எல்லாம் மனதில் வைத்துவிட்டு வருத்துகின்ற செயல்களையும் துன்பம் கொடுக்கின்ற செயல்களையும் விட்டுவிட்டு அவன் அம்மாவை தேடி குழந்தை போவது போல் எம்மை அணுகும் போது அவன் கர்மங்களின் வரிசையைக் நீக்கி விடுவதோடு மட்டும் இல்லாமல் அவனுக்கு தர்மங்களை முறைப்படி செய்கின்ற வழியையும் காட்டி அவன் உயர்வான நல்ல கர்மங்களை வரிசையாக தொடர்ந்து செய்து இறைவனின் திருவடிகளிலே அவனும் ஒரு ஆபரணமாக இருப்பதற்கு வழியைக் காட்டி எம் முன்னே ஒருவரோடு ஒருவர் வித்தியாசமாக பார்க்கும் எந்த விதமான குணங்களையும் பார்க்காமல் அனைவரும் ஓரே கூட்டமாக இறைவனைத் தேடும் ஒரு இனமாக நின்றால் தான் நாங்களும் இறைவனது திருவடிகளைக் காட்டித் தருவோம். எனவே இந்த நல் வாக்குகளை எல்லாம் உங்களின் காதுகளில் கவனமாக கேட்டுக் கொண்டு எண்ணங்களில் ஞாபகமாக முறைப்படி வைத்து இறைவன் திருவடியை சிந்திக்க பல்வேறு வாக்கு வரிசைகளை இனிக்கின்ற பழங்களாக இனி மலருமப்பா.