இறை உண்டு பற்றிய அகத்திய மாமுனிவர் வாக்கு:
ஆகுமப்பா. இறை உண்டு. யாங்கள் (சித்தர்கள்) உண்டு. தெய்வ சக்தி உயர் சக்தி உண்டு. மாந்தனுண்டு. சித்தனுண்டு. எல்லா உயிர்களும் உண்டு. ஆயினும் கூட அவரவர் பக்குவம் மனநிலை அறிவுநிலை புண்ணியம் எண்ணங்கள் நடைமுறை வாழ்வு இவைகளைப் பொறுத்துத்தான் இந்த இதழில் (ஜீவநாடி) பலசமயம் யாங்கள் வாக்குகள் பகிர்வதும் மெளனம் காப்பதும். சித்தர்கள் பேதங்கள் பார்க்கலாமா? எல்லா உயிர்களும் ஒன்றுதானே என்ற எண்ணங்கள் மனிதனுக்குத் தோன்றும். எமக்கு எவர்மீதும் உயர்வு தாழ்வு பேதமில்லை. ஆயினும் கூட மனதிலே சில திட்டங்களை வகுத்துக் கொண்டு சில காட்சிகளை கற்பனை செய்து கொண்டு அது தொடர்பாகவும் அதுபோலத்தான் வாழ்வு என்றும் வாழ்வின் நோக்கம் என்றும் எம்முன்னே வந்து அமர்ந்தால் எமக்கு அவனவன் கர்மாதான் கண்ணுக்குத் தெரியும். சேர்த்த பாவத்தைக் குறைப்பதற்கும் இனி பாவம் செய்யாமல் வாழ்வதற்கும் மட்டும்தான் மனித தேகம் மனித பிறவி. அந்த ஆற்றலை இறை மனிதனுக்குத் தந்ததின் காரணம் பிறர் துன்பங்களைக் கண்டு வருந்த இரங்க வேண்டும் என்பதற்காகத்தான். அதுபோல இந்த எண்ணம் யாருக்கு இருந்தாலும் அவர்கள் உயர்ந்த ஆன்மாக்களே.
இதில் விலங்கு விருக்ஷம் (மரம்) மனிதன் என்ற பேதமில்லை. பல்வேறு காரணங்களுக்காக நாங்கள் (சித்தர்கள்) வாக்குகளை மறுப்பதும் நிறுத்துவதும் கூறாமல் இருப்பதும் உண்டு. முதல் காரணமாக இந்த இதழை (ஓலைச்சுவடி) வாசிக்கின்ற இவன் அனுதினமும் அதிகாலையிலும் ஏனைய அயர்வு பொழுதிலும் மனம் ஒன்றி அதிகமதிகம் பிராத்தனை செய்ய வேண்டும். அடுத்து எமை (அகத்திய மாமுனிவர்) நாடி வருபவர்கள் ஏதோ கோள் ஆய்வு செய்வதும் ஜோதிட நிமித்தம் கேட்பதும் அருள் வாக்கு கேட்பதுமாக இல்லாமல் மெய்யாகவே தர்மவானாக எல்லா நிலையிலும் நல்லவனாக இருக்க வேண்டும். வேறு வகையில் கூறப்போனால் எம்மை நாடாவிட்டாலும் பாதகமில்லை மனசாட்சிப்படி வாழ்ந்து வந்தால் அவன் எம்மைத் தேட வேண்டாம் யாமே அதுபோல் இருக்கும் மனிதனைத் தேடிச் செல்வோம்.
கோடி கோடியாக அள்ளிக் கொடுத்த தர்மனை விட பலநாள் பட்டினியாகக் கிடந்த அந்த அந்தணன் தன் பசி தன் குடும்பப் பசி அனைத்தையும் மறந்து வந்திருந்த முனிவருக்குத் தந்த அன்னமே உயர் அன்னமாகி அதுவே உயர் தர்மமாகிவிட்டது. தர்மம் என்பது அளவைப் பொறுத்ததல்ல. சத்யம் என்பது சூழ்நிலையைப் பொறுத்ததல்ல. விளைவு இருக்கும் சூழல் இவற்றைப் பொறுத்ததே. இருப்பதில் கொடுப்பது சிறப்பு என்றால் இருப்பதையே கொடுப்பது சிறப்பிலும் சிறப்பு.
உயர்ந்த கருத்துக்களை கேட்பதும் மனதில் பதிய வைப்பதும் சத்சங்கம் நடத்துவதும் மட்டுமல்லாமல் அதை பின்பற்றவும் முயல வேண்டும். இதெல்லாம் யாரால் இயலும்? கலிகாலத்தில் இதெல்லாம் சாத்தியமா? உயர்ந்த பழக்க வழக்கங்கள் கேட்பதற்கும் ஓதுவதற்கும் விவாதம் செய்வதற்கும் நன்றாக இருக்கிறது. ஆனால் பின்பற்றக் கடினமாக உள்ளது என்று ஒருவன் கூறினால் நல்லவனாக உயர்வானவனாக வாழ்வது எளிது என்றால் அனைவரும் அவ்வாறு வாழ்ந்துவிட்டு போவார்களே? அது கடினம் என்பதால்தான் அதற்குரிய மரியாதையும் இருக்கிறது. ஏன்? செல்வம் திரட்டுவதைவிட கடினம் இந்தக் காலத்தில் ஒரு மனிதன் நல்லவனாக வாழ்வது. ஆக இதனால் நான் இந்த தவறை செய்தேன். இந்த சூழ்நிலையால் நான் அடிபணிந்து போக வேண்டியிருந்தது என்று எந்தக் காரணமும் கூறாமல் ஒரு மனிதன் சத்தியவானாக இருக்க வேண்டும். அவ்வாறு ஒருவன் செல்லத் துவங்கிவிட்டால் இறை அவனை நோக்கி வரும் என்பது உறுதி.