கேள்வி: அன்பர்கள் மனதில் எண்ணியவை நடக்க தங்கள் ஆசிகள் வேண்டும்:
கட்டாயம் நன்மைகள் நடக்கும். நன்மைகள் நடப்பதற்குதான் எப்பொழுதுமே சித்தர்கள் காலகாலம் மனிதர்களுக்காக பாடுபடுகிறார்கள். ஆனால் மனிதர்கள் அதனைப் புரிந்து கொள்வதில்லை என்பதுதான் மெய்யிலும் மெய்யாகும்.
கேள்வி: இந்த சுப நாளிலே ஆலயங்கள் சென்று வந்தோம். அதற்கு ஆசிகள் வேண்டும்:
இறைவன் அருளால் ஆன்மா லயிக்கின்ற இடம் ஆலயம் என்பார்கள். ஆன்மா என்றால் தன்னுடைய உடலுக்குள் உள்ளே உணர முடியாமல் இருக்கின்ற உயிர் என்றும் இயக்கம் என்றும் மனிதனால் கருதப்படுகின்ற ஒன்று என்று வைத்துக் கொள்ளலாம். தொடர்ந்த எண்ணங்களா? தொடர்ந்த சிந்தனை வாதமா? அல்லது குருதியும் (இரத்தமும்) சதையும் எலும்பும் கொண்ட கூட்டமா? இதில் எது ஆன்மா? என்பதை ஒரு மனிதன் என்று உணர்கிறானோ அப்பொழுது அவன் சரியான நேர்பாதைக்கு செல்வதற்கு வாய்ப்பு வரும். பிறர் மீது வெறுப்பு வராது. ஏனென்றால் எல்லா கூட்டிற்குள்ளும் இருப்பது ஆத்மாதான். இதிலே உயர்வு தாழ்வு இல்லை. வினைகள்தான் குறுக்கே மறைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வினைகளை நிஷ்காம்யமாக செயல்களை செய்து போக்கிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு வரும். அந்த உணர்வு அனைவருக்கும் வர இறைவனருளால் நல்லாசிகளைக் கூறுகிறோம்.