கேள்வி: காம தேகத்தை உடைய எங்களுக்கு மனைவி மக்கள் தேவை. காம தேகத்தை அறுத்த தங்களுக்கும் குடும்ப வாழ்க்கையை ஏன் இறை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது? அது மட்டுமல்ல. எங்களுக்கு அருள் செய்யும் நிலையில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் தாரம்(மனைவி) இருப்பதாக அறிந்து கொண்டோம். மனைவி மட்டுமல்ல மக்களும் இருக்கிறார்கள். ஏன்? அந்த சிவபெருமானுக்கே உமாதேவியாரும் விநாயகரும் முருகப்பெருமானும் உள்ளனர். அதுமட்டுமல்ல ஞானப்பழம் கிடைக்காத கோபத்தினால் தான் முருகப்பெருமான் பழனி மலையில் ஆண்டிக் கோலத்தில் இருக்கிறார் என்று புராணங்கள் கூறுகின்றது. இவை அனைத்தும் உண்மையா? விளக்க வேண்டுகிறேன்:
இறைவன் அருளாலே இன்னவன் (இந்த கேள்வி கேட்டவர்) நல்ல தர்மங்களை செய்து வருகிறான். தர்மத்தில் நாட்டம் கொண்டிருக்கிறான். ஆனாலும் விதி வசத்தால் நல்ல ஞானக்கருத்துக்களை புரிந்து கொள்ள முடியாத ஒரு நிலையில் இருக்கிறான். நாங்கள் எங்கிருந்து துவங்கினாலும் இவனுடைய விதி இப்பொழுது அதனை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. இருந்தாலும் சுருக்கமாகக் கூறுகிறோம். இவனை என்றால் இவன் மட்டும் குறிப்பதல்ல. இவனொத்து பலருக்கும் இதுதான் நிலை. இதை குற்றமாக குறையாக நாங்கள் கூறவில்லை. அவனவன் ஆன்ம நிலை என்பது அவ்வாறு இருக்கிறது. ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒப்புமை உவமை உருவகப்படுத்துதல் என்றெல்லாம் வார்த்தை இருக்கிறது. மனிதன் தன்னைப் போலவே இறைவனைப் பார்க்க பழகுகின்ற விதம்தான் இறைவனுக்கும் குடும்பம் இருப்பதாக கூறப்படுகின்ற ஒரு விஷயம். இதை தத்துவார்த்த ரீதியாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர மனிதன் தன்னைப் போல பார்க்கக்கூடாது.
அடுத்ததாக மனித தேகத்திற்கு காமம் இருக்கிறது. எனவே அதற்கு துணை வேண்டும் என்றெல்லாம் கூறுகிறான். நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தேகத்தில் காமம் இருப்பதால் மட்டுமே ஒரு மனிதன் தறிகெட்டுப் போவதில்லை. அதையும் தாண்டி அவனுக்கு அரைகுறையாக சிந்திக்கின்ற அறிவை இறைவன் தந்ததால்தான் இவ்வாறு இருக்கிறது. நன்றாக கவனிக்க வேண்டும். எங்காவது விலங்குகள் போராட்டத்தோடு காமத்தை தீர்த்துக் கொள்கிறதா? மனிதன் ஒருவன்தான் அவ்வாறு செய்கிறான். எனவே இங்கு உணர்வல்ல. அந்த உணர்வை சரியாக பிரயோகப்படுத்த நல்ல அறிவு வேண்டும். அந்த அறிவை பயன்படுத்த மனிதன் தவறுகிறான். அந்த அறிவைதான் உபதேசமாக ஞானியர்களும் புராணங்களும் எடுத்துக் கூறுகின்றன. எனவே தத்துவார்த்தமாகக் கூறப்பட்ட புராணத்தில் உள்ள மூலக் கருத்துக்களையெல்லாம் இவன் புரிந்து கொள்ள வேண்டும். அல்லது இதனை சரியாக புரிந்து கொள்ள முடியாத நிலையில் சில மனிதர்களை அணுகி முதலில் இவன் சில விஷயங்களை புரிந்து கொண்டால் போதும். பிறகு நாங்கள் கூறுகின்ற விளக்கம் இவனுக்கு புரியும். எனவே இப்பொழுது இவன் தர்மத்தை தொடர்ந்து செய்து வரட்டும். அந்த தர்மமே இவன் பாவத்தைக் குறைத்து இவனிடம் இருக்கின்ற அஞ்ஞானத்தை மெல்ல மெல்ல நீக்கும். என்றாலும் இவனும் என் சேயவனே (மகனே). இவன் நன்றாக வாழ நல்லாசி கூறுகிறோம்.