கேள்வி: நாங்கள் அறப்பணிகள் தர்மம் செய்யும் பொழுது எங்களைவிட வயதில் பெரியவர்கள் எங்களை வணங்கும் பொழுது மனதிற்கு கஷ்டமாகவும் சங்கடமாகவும் இருக்கிறது. தர்மம் செய்யாத செய்ய விரும்பாத சிலர் எங்களை பார்க்கும் பொழுது விமர்சனம் செய்கிறார்கள். இந்த இடர்பாடான சூழலை எதிர் கொள்வது எப்படி?
இறைவன் கருணையால் மனத்திட்பத்தை (மனஉறுதியை) வளர்த்துக் கொள்ள வேண்டும். உன்னை வணங்கினால் நீயும் வணங்கிவிடு. அதுதான் சரியான முறையாகும். அடுத்ததாக தர்மத்தை பொதுவில் செய்யும் பொழுது அதை விமர்சனம் செய்யும் மனிதர்கள் என்றும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். இதற்கு நாங்கள் கூறுகின்ற உதாரணம் தவறான வழியை பின்பற்றக்கூடிய மனிதன் என்ன போதித்தாலும் அவன் தான் செய்வதை விடுவதில்லை. நான் இப்படித்தான் இருப்பேன் இதைத்தான் செய்வேன் என்று உறுதியாக இருக்கிறானே? அந்த உறுதி நல்லதை செய்கின்ற மனிதனுக்கு ஏன் இல்லாமல் போகிறது.
கேள்வி: இறைவனால் படைக்கப்பட்ட மனிதன் பரிணாம வளர்ச்சியில் எவ்வளவோ முன்னேறியிருக்கிறான். வாழ்க்கை முறையும் முற்றிலும் மாறிவிட்டது. ஆனால் ஆதிகாலம் தொட்டு இறை வழிபாடுகள் ஹோம யாகங்கள் தூப தீபங்கள் போன்றவை மட்டும் மாறாமல் இருக்கிறதே. மனிதர்கள் அழிந்து போகக் கூடியவர்கள் என்பதால்தான் மாற்றங்களை அனுமதிக்கிறாரா? விளக்குங்கள்:
அப்படியெல்லாம் ஏதுமில்லையப்பா. காலத்திற்கு தகுந்தாற் போல் இறை வழிபாடுகளும் மாறிக் கொண்டுதான் இருக்கிறது. இங்கு புறச்செயல்களை பார்ப்பதில்லை இறைவனும் நாங்களும். ஒரு மனிதன் செய்கின்ற பூஜையிலே அவன் அகந்தைதான் நாங்கள் எப்ப்பொழுதும் பார்க்கிறோம். நாங்கள் அடிக்கடி கூறுகின்ற உதாரணம்தான். கற்களை தம் மீது விட்டெறிந்த மனிதனுக்கு இறைவன் அருள் செய்கிறார். அதே சமயம் மலர்களை தம் மீது விட்ட மன்மதனை எரித்து விடுகிறார். எனவே இங்கு செயலைப் பார்ப்பதில்லை. பின்னால் உள்ள நோக்கத்தை தான் இறைவன் பார்க்கிறார். இறைவன் கருணையால் நாங்கள் கூற வருவது என்னவென்றால் இறைவன் அருளால் மனிதன் உலகியல் ரீதியான முன்னேற்றங்களை பெற்றுக் கொண்டே வருகிறான். அதற்கேற்றாற் போல் அன்றைய தினம் ஆலயத்தில் தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டன. இன்றுதான் ஔிரும் விளக்குகள் வந்து விட்டனவே. காலத்திற்கேற்ப மனிதன் எல்லாவற்றையும் மாற்றுவது போல் இது போல் வழிபாட்டு முறைகளையும் மாற்றிக் கொண்டுதான் வருகிறான். வழிபாட்டு முறைகளை மாற்றுவது குற்றமல்ல. ஆனால் வழிபடுகின்ற விதத்தில் உள்ள எண்ணத்தில் என்ன இருக்கிறது? என்று பார்த்துதான் குற்றமா? இல்லையா? என்று இறைவன் பார்ப்பார்.