அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் நலமான எண்ணங்கள் நலமான வார்த்தைகள் நலமான செய்கைகள் இவைகள் கட்டாயம் நலத்தை சேர்த்துவிக்கும். நலம் எது? என்பதில்தான் மாந்தர்களுக்கு (மனிதர்களுக்கு) எப்பொழுதுமே ஐயமும் குழப்பமும் சமயங்களில் தெளிவற்ற சிந்தனையும் இருந்து வருகின்றது. யாங்கள் கூறுகின்ற நலம் என்றென்றும் தன்னலம் மட்டுமல்லாது பொது நலமும் ஆகும். பொது நலமின்றி எண்ணப்படுகின்ற எண்ணம் பேசப்படுகின்ற வார்த்தைகள் செய்யப்படுகின்ற செய்கைகள் இவைகள் யாவுமே அப்படி நோக்கம் கொண்ட மாந்தனுக்கு (மனிதனுக்கு) என்றும் துன்பத்தை அமைதியின்மையைத் தரும். எனவே யாம் இறைவனின் திருவடியை வணங்கி எமை (அகத்திய மாமுனிவர்) நாடும் மாந்தர்களுக்கு (மனிதர்களுக்கு) அடிக்கடி கூறுவதே பொது நலம் ஆகும். அதன் அடிப்படையில்தான் தர்மங்களையும் தர்மம் சார்ந்த செயல்களையும் இயம்பிக் கொண்டேயிருக்கிறோம். இறைவன் அருளாலே தர்மம் என்கிற சொல் வெறும் பரஸ்பரம் செய்கின்ற உதவிகளை மட்டும் குறிப்பிடாது. உதவி செய்யப்படுகின்ற தருணம் சூழல்,எண்ணம் இவையனைத்தையும் அடிப்படையாய்க் கொண்டே அது முழுமையான இறை வழி தர்மமா? அல்லது மனித வழி தர்மமா? என்று பார்க்கப்படுகின்றது. ஏனெனில் மேலெழுந்தவாரியாக பார்த்தால் அனைத்துமே தர்மமாக உதவியாகத் தெரியலாம். ஆனால் அனைத்தையும் இறை வழி தர்மமாக யாங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எந்த சுயநலமும் இல்லாமல் வேறு சூது எண்ணங்கள் இல்லாமல் திறந்த மனதோடு பெருந்தன்மையோடு செய்கின்ற செயலே உண்மையில் இறை சார்ந்த தர்மமாகும். இயம்பிடுவோம் மேலும் கோடை காலத்தின் வெம்மையை தணிக்க ஆங்காங்கே பொது இடங்களில் தென்னை ஓலையைக் கொண்டு பந்தல் இடுவது வழக்கம். நன்றாய் கவனிக்க வேண்டும். அது கூரைதான். ஆனால் அது கூரை வருணன் (மழை) பொழிவிற்கு தாக்குப்பிடிக்குமா? என்றால் பிடிக்காது. ஆனாலும் கூரை வேய்ந்தது போலிருக்கும். மனிதனை பார்த்துக் கேட்டால் சற்றே அனலை தணிக்க இந்த வழிமுறை என்பான். ஆனால் அனலையும் தணிக்க வேண்டும் வருணன் பொழிவையும் தாங்கவேண்டும் என்றால் எவ்வாறு கூரையிடல் வேண்டும்? பந்தலிட வேண்டும்? என்றால் மிக மிக மிக அடர்த்தியாக இடல் வேண்டும். பெரும்பாலும் மனிதர்கள் செய்கின்ற உதவி கோடைக்கால கூரை போல் இருக்கின்றது. யாங்கள் கூறுகின்ற தர்மவழி மழைக்கால கூரை போல் இருந்திடல் வேண்டும். இதில்தான் எப்பொழுதுமே வேறுபாடுகள் இருந்து கொண்டே வருகிறது மனிதர்களுக்கும் மகான்களுக்கும். இறைவன் அருளாலே இது போன்ற கருத்தை மனதிலே வைத்துக் கொண்டால் இறை நோக்கி வருவது அல்ல அல்ல. ஒரு மனிதனை நோக்கி இறை வரும் வண்ணம் மனிதன் நடந்து கொள்ள வேண்டிய முறைகளில் இதும் ஒன்றாகும். இறைவன் அருளால் இதுபோல் இங்கு அமர்ந்துள்ள சேய்களுக்கு (பிள்ளைகளுக்கு) யாம் நல்லாசிகளை இத்தருணம் இயம்புகின்றோம். நல்விதமாய் வாழ்வு நிலை செல்ல எம் வழி வருகின்ற சேய்களுக்கும் (பிள்ளைகளுக்கும்) எமது வழிமுறை என்று அறியாமல் எமது வழிமுறைகளை பின்பற்றிக் கொண்டிருக்கும் சேய்களுக்கும் கட்டாயம் நலம் நடந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று மீண்டும் இறை வழியில் நாங்கள் (சித்தர்கள்) இறையை எண்ணி இறைவனின் திருவடியை எண்ணி பிராத்தனை செய்து இதுபோல் நல்லாசிகளை மீண்டும் இதுபோல சேய்களுக்கும் அதுபோல் சேய்களுக்கும் இயம்புகின்றோம்.