கேள்வி: சத்சங்கமாக அன்பர்களை அழைத்து வாக்கு அருள வேண்டும்:
இறைவன் அருளாலே மிகப்பெரிய நெருக்கடி எது தெரியுமா? மகான்கள் மகான்கள் நிலையிலேயே மனிதர்களை அணுகுவதுதான். மனித நிலைக்கு இறங்கி சிலவற்றை எம்மால் கூற இயலாது. வெளிப்படையாக நாங்கள் கூறவந்தால் எதற்காக இந்த வாக்கை சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்? என்பதை புரிந்து கொள்ளாமல் அதற்கு குதர்க்கமான பொருளைத்தான் பல மனிதர்களும் கொள்வார்கள். யாரையெல்லாம் மனதில் வைத்து நீ கேட்கிறாயோ அவர்கள் விதி அனுமதித்தால் யாருக்கெல்லாம் இந்த ஜீவ அருள் நாடி மீது நம்பிக்கை வந்து தர்மத்தின் மீது நாட்டம் வந்து சத்தியத்திலும் பிடிப்பு வந்தால் இறைவனருள் அவர்களை வழிநடத்தும். யாமும் (அகத்திய மாமுனிவர்) இந்த ஜீவ அருள் ஓலை (ஜீவநாடி) மூலம் வழி நடத்துவோம். பொதுவாக சிலரை அழைத்து சத்சங்கமாக வாக்கை கூறவேண்டும் என்று யாம் எண்ணிணாலும் எமைப் பொருத்தவரை ஒருவன் தீய வழியில் சென்றாலும் நல்ல வழியில் சென்றாலும் எமது சேய்களே. நல்வழிப்படுத்த வேண்டியது எமது கடமை என்றாலும் இறைவன் அனுமதித்தால் நாளை கூட அதற்கு ஆயத்தமாக இருக்கிறோம். எனவே இறைவனிடம் எல்லோரும் பிராத்தனை வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:
மனித மதியானது விதிவழியாக செல்லும் பொழுது இறைவனும் நாங்களும் வெறும் பார்வையாளராகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது. அது எங்ஙனம் சாத்தியம்? அது எங்ஙனம் நியாயம்? என்றெல்லாம் மனிதன் வினவலாம். படைத்த இறைவனுக்கு பொறுப்பில்லையா? ஞானிகளுக்கு பொறுப்பில்லையா? மனிதர்கள்தான் அறியாமையால் தவறு செய்தால் அல்லது உழன்றால் அதிலிருந்து அவர்களை கரை சேர்க்க வேண்டாமா? என்ற ஒரு வினா எழலாம். அப்படி கரை சேர்ப்பதற்குதான் விதியை எதிர்த்து ஒரு மனிதன் பயணம் செய்ய வேண்டும் என்பதற்குதான் இறைவனின் அருளாணைக்கேற்ப யாம் (அகத்திய மாமுனிவர்) இந்த ஜீவ அருள் ஓலையிலே சில நுணுக்கமான வாக்குகளையெல்லாம் கூறுகிறோம். ஆனால் நடைமுறையில் இவையெல்லாம் ஏற்கத்தக்கதாக இல்லை. நடைமுறையில் இவற்றை பின்பற்ற முடியாது என்று மனிதன் தனக்குத்தானே சமாதானம் கூறிக் கொண்டு மீண்டும் விதிவழியாகத்தான் செல்கிறான்.