கேள்வி: உடல் என்ற கருவியை பராமரிப்பது எப்படி ஐயனே?
இறைவன் அருளால் பெற்ற உடலை பராமரிக்க பல மனிதர்களுக்கு தெரியுமப்பா. சில ஆயிரம் விலை கொடுத்து வாங்கிய ஒரு வாகனத்தை இயக்குவதற்கு திரவப் பொருளை நிரப்பாமல் தண்ணீரை விட்டு நிரப்பி ஓட்டு என்றால் யாராவது ஓட்டுவார்களா? அல்லது கல்லையும் மண்ணையும் அள்ளித் தெளித்து ஓட்டு என்றால் யாராவது ஓட்டுவார்களா? ஓட்டமாட்டார்கள். கருவி அந்த வாகனம் வீணாகி விடும் என்கிற அச்சம். ஆனால் இந்த உடலானது உடனடியாக வீணாகவில்லை என்பதால் எதையெல்லாம் உண்ணக் கூடாதோ அதையெல்லாம் உண்ணுவதும் எதையெல்லாம் செய்யக் கூடாதோ அதையெல்லாம் செய்வதும் இயல்பான விஷயமாகி விட்டது. பெரும்பாலான மனிதர்கள் உடலை நன்கு பராமரிக்க என்ன உண்ண வேண்டும்? என்பதை விட என்னவெல்லாம் உண்ணக் கூடாது என்று அறிந்து கொண்டால் போதுமப்பா. என்ன செய்ய வேண்டும்? என்பதை விட என்னவெல்லாம் செய்யக் கூடாது? என்பதை அறிந்து கொண்டால் போதுமப்பா.
கேள்வி: ஒருவர் பிறந்த நேரம் சரியாக கணிக்கப் படவில்லையென்றால் லக்னம் போன்ற விஷயங்கள் மாறிவிடும். இதற்கு என்ன செய்வது?
துல்லியமாக கணிக்க முடியாமல் ஜாதகம் தவறாக அமைய வேண்டும் என்ற விதி இருப்பதால்தான் அவ்வாறெல்லாம் நடக்கிறது. இதைப் போன்ற ஜாதக குறைபாடு உள்ளவர்கள் எல்லோருமே நவக்ரக பிராயச்சித்தம் செய்து கொள்வதும் வாய்ப்பு உள்ள பொழுதெல்லாம் நவக்கிரக ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வதும் இல்லத்தில் அமர்ந்து நவக்கிரக அதிதெய்வ மந்திரங்களை உருவேற்றுவதும் கட்டாயம் ஜாதகத்தில் உள்ள குழப்பத்தை நீக்கி வழியைக் காட்டும்.