கேள்வி: நான் பொதிகை மலை சென்றிருந்த பொழுது ஒரு அன்பர் என்னிடம் நீ வந்தது சந்தோஷம். அகத்தியருக்கு திருப்தி என்று வாக்கு சொல்வது போல் கூறினார். அப்படி நீங்கள்தான் பேசினீர்களா? அல்லது அந்த அன்பரின் கற்பனையா?
இறைவனருளால் ஒன்றைத் தெரிந்து கொள். இந்த ஜீவ அருள் ஓலையை (ஜீவநாடியை) கற்பனை என்றுதான் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நிலைமை இவ்வாறு இருக்க இப்பொழுதெல்லாம் கலிகாலத்திலே எம்மையே நாம் நிரூபித்துக் கொள்ள வேண்டிய நிலையில்தான் யாமும் இருக்கிறோம். எனவே உண்மை என்று எடுத்துக் கொள். அதனால் என்ன நட்டம்? பொய் என்றாலும் என்ன பெரிதாக நட்டம் வந்துவிடப் போகிறது? நாங்கள் குறிப்பாகக் கூறுவது என்னவென்றால் இது போன்ற வினாக்களை விடுக்கும் பொழுது யாங்கள்(சித்தர்கள்) மெளனத்தைதான் கடை பிடிக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் ஏதாவது நாங்கள்(சித்தர்கள்) உண்மையைக் கூறினால் மனிதர்களுக்குள்ளே தேவையில்லாத பிரச்சனைகளும் பிணக்குகளும் ஏற்படும். எனவே இது போன்று அடுத்த ஒரு சூழலில் நீ இருந்தால் செவியாடலாகக் கேட்டுக் கொள் அமைதியாக இரு. ஆய்வு எதுவும் செய்யாதே.
கேள்வி: ரசாயன உணவு இயற்கை உணவு எது சிறப்பு?
எல்லா சூழலிலும் இயற்கை உணவு என்பதை நாங்கள் (சித்தர்கள்) மறுக்கவில்லை என்றாலும் தற்காலத்தில் அது சாத்தியமில்லை என்பதும் எமக்குத் தெரியும். எதை ஏற்றாலும் அதற்கு ஏற்றாற் போல் உடலை மாற்றிக் கொள்ளக் கூடிய சக்தி சில விலங்குகளுக்கு இருக்கிறது. கடுமையான ரசாயனத்திலிருந்து கூட தன்னை தற்காத்துக் கொள்ளுகின்ற பூச்சியினங்கள் இன்னும் இந்த உலகிலே வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. அந்த நிலையிலே மனிதன் கூடுமானவரை ரசாயன கலப்பில்லாத பொருள்களை ஏற்பதே சரி என்றுதான் நாங்கள் கூறுகிறோம். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாத பட்சத்திலே முடிந்தவரை அதனை பின்பற்றிவிட்டு அதன் தீய பக்க விளைவுகளில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள கசப்பான மூலிகைகளை அதிகம் ஏற்றால் அதனால் தீய பின் விளைவுகள் இல்லாமல் இருக்கும். இது ஒன்றுதான் இக்கலியில் (இக்கலிகாலத்தில்) ஏற்ற வழியாகும்.