கேள்வி: ஆலயத் திருப்பணி கோரிக்கை:
இறைவனின் கருணையைக் கொண்டு யாங்கள் (சித்தர்கள்) பலருக்கு பலமுறைக் கூறியதுதான். இந்த இன்னவனுக்கும் கூறுகிறோம். ஒரு ஆலயம் சிறப்புற வளர வேண்டுமென்றாலும் அந்த ஆலயம் நல்லவிதமாக கலச விழா காண வேண்டுமென்றாலும் அதற்கும் சில சூட்சும காரணங்கள் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க அந்த ஆலயம் தொடர்பான மனிதர்களும் அந்த ஆலயத்தை சுற்றி வசிக்கின்ற மனிதர்களும் ஒன்றுபட்ட உள்ளத்தோடு இறைவனை வேண்டி முயற்சியில் இறங்கினால் கட்டாயம் பலன் உண்டு. இதுபோல் முன்னர் ஒருவனுக்குக் கூறிய வாக்கையே இன்னவனுக்கும் கூறுகிறோம். மூத்தோனை அதாவது விநாயகப் பெருமானை தமிழகத்தில் உள்ள சிறப்பான ஸ்தலங்கள் (பிள்ளையார்பட்டி திருச்சி உச்சி பிள்ளையார் கோவில் போன்ற ஸ்தலங்கள்) சென்று வணங்கினால் தடையகன்று நல்ல முறையிலே அந்த திருப்பணி நடை பெறும். இந்த நிலையிலே தொடர்ந்து முயற்சிகள் சோர்வின்றி செய்ய நலம் உண்டு. ஆசிகள்.
கேள்வி: எந்தக் கோவில் மூத்தோனை (விநாயகப்பெருமானை) வணங்கினால் சிறப்பு? வேகமாகப் பணி நடக்கும்?
இறைவனின் கருணையாலே யாம் (அகத்திய மாமுனிவர்) ஒரு ஆலயத்தைக் குறிப்பிட்டால் அப்படியானால் வேறு ஆலயம் சிறப்பில்லையா? என்று ஒரு மனிதன் வினவுவான். ஆலயம் எப்பொழுதுமே சிறப்புதானப்பா. அந்த ஆலயத்திற்கு எந்த மனோபாவத்தில் மனிதன் செல்கிறான் என்பதைப் பொறுத்துதான் அவனுக்கு இறைவன் அருள் கிட்டுகிறதா? இல்லையா? என்பது புரியும். நாங்கள்(சித்தர்கள்) குறிப்பிட்டதை நன்றாக கவனி. விநாயகப்பெருமானுக்கு என்று பிரசித்தி பெற்ற ஆலயங்கள் அங்கு சில உண்டு. பிரசித்தி பெற்ற என்றால் மனிதர்கள் அறிந்த என்று பொருள். மனிதர்கள் அறியாத ஆலயங்களும் உண்டு. அது குறித்து பின்னர் உரைப்போம்.