கேள்வி: சதுரகிரி மலையில் சிவபெருமான் சற்று சாய்ந்து காட்சியளிப்பதின் காரணம் என்ன?
மனிதர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிவபெருமான் எப்பொழுதோ சாய்ந்து விட்டாரப்பா. முதலில் அவர் கங்கையிடம் சாய்ந்து விட்டார். பிறகு தன் பக்தர்களுக்காக விதவிதமாக சாய்ந்து விட்டார். மதுரையம்பதியில் அவர் பலமுறை சாய்ந்திருக்கிறாரப்பா. நீர் சுமந்து வரும் ஒரு பெண்ணிற்காகக் கூட ஒரு ஸ்தலத்தில் சாய்ந்து இருக்கிறார். எனவே இதன் பொருள் என்ன? நல்லவர் பக்கமும் நல்ல பக்தர்கள் பக்கமும் இறைவன் எப்பொழுதுமே சாய்ந்திருப்பார் என்பது பொருளாகும்.
கேள்வி: பொதிகை மலையில் தங்கள் தரிசனத்திற்குப் பிறகு வழக்கமாக மழை வரும் என்பார்கள். ஆனால் நாங்கள் தரிசனம் செய்து முடித்த பிறகு இடி விழுந்து மரங்கள் பற்றி எரிந்தன இது எத்தகைய வெளிப்பாடு?
பொதுவாக இறை தரிசனத்திற்குப் பிறகு மழை பெய்தால் அது இறைவனின் ஆசிர்வாதம் என்று நாங்கள் கூட கூறியிருக்கிறோம். அப்படி நிகழவில்லை என்பதற்காக எதிரான பொருளைக் கொள்ளக் கூடாது. எனவே பல்வேறு தருணங்களிலே இறைவன் தன் கருத்தை உணர்த்துவதற்கு பல்வேறு விதமான முறைகளைக் கையாளுகிறார். எனவே இந்த ஒரு நிகழ்ச்சி இனி எதிர்காலத்தில் நடந்தாலும் அல்லது எதுவுமே நடவாமல் போனாலும் கூட அதற்காக இறைவனின் கருணையோ மகான்களின் அருளாசியோ இல்லை என்று எண்ணத் தேவையில்லை. தற்கால மனிதர்களுக்குக் கூறுகிறோம். அத்தனை தூரம் ஒருவன் கடந்து செல்கிறான் என்றாலே இறைவனின் கருணை இருப்பதால்தான் அப்படி ஒரு உணர்வு வருகிறது. அங்கு செல்ல வேண்டும் என்கிற ஒரு நிலை ஏற்படுகிறது. எனவே இதுவும் ஆசிர்வாதம்தான்.