கேள்வி: இராம ரக்ஷா ஸ்தோத்ரம் பற்றி:
மிக மிக உயர்வு. அந்த உயர்வைக் காட்டிலும் எதாவது ஒரு வார்த்தை இருந்தால் அந்த வார்த்தைகளை இங்கே பயன்படுத்திக் கொள்ளலாம். அதைத் தவிர வேறு கூற யாது இருக்கிறது அப்பனே?
கேள்வி: பரணி கிருத்திகை அஷ்டமி நவமிகளில் தாங்கள் வாக்கை (ஜீவநாடி வாக்கு) அளிப்பதில்லை என்பது உண்மையா?
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் பரணியோ அட்டமியோ நவமியோ கிருத்திகையோ சந்திராஷ்டமமோ எமக்கு (அகத்திய மாமுனிவர்) ஏதும் இல்லையப்பா. எம்மைப் பொருத்தவரை புரிதல் உள்ள மனிதன் வந்து அமர்ந்தால் (ஜீவநாடி முன் அமர்ந்தால்) அதே போதும். நாங்கள் (சித்தர்கள்) அல்லும் பகலும் அறுபது நாழிகையும் (ஒரு நாள்) வாக்கு உரைக்கத் தயார் இறைவன் அனுமதித்தால். ஆயினும் சுருக்கமாக வெளிப்படையாகக் கூற வேண்டுமென்றால் வருகின்ற மனிதனின் பூர்வீக பாவங்கள் கடுமையாக இருக்க அவன் வினவுவதும் லோகாய விஷயமாக இருக்க ஏற்கனவே பாவங்கள் அவனை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டு இருக்க வேதனையில் வந்து அமரும் அவனுக்கு எதாவது ஒரு வழியைக் காட்ட வேண்டுமென்றால் விதி வழிவிட வேண்டும். ஆனால் லோகாய விஷயமாக அவன் கேட்கின்ற வினாவிற்கு யாம் இறைவன் கருணையால் விடையைக் கூறி அதை அவன் பின்பற்றி மேலேறி வர வேண்டத்தான் நாங்கள் காலத்தைப் பார்க்கிறோமே தவிர பொதுவாக ஞானத்தை அறிந்து கொள்வதற்கு எக்காலமும் தடையல்ல.