கேள்வி: ஒரு மனிதன் மற்றவர்களால் பாதிக்கப்பட்டால்?
இறைவன் கருணையால் இவன் சுற்றி வளைத்துக் கேட்பதே செய்வினை குறித்துதான். இந்த செய்வினையால் (வினாவைக் கேட்டவனல்ல வினாவை கேட்பித்தவனைப் பற்றி யாங்கள் கூறுகிறோம்) தன் குடும்பம் பாதிக்கப்பட்டு இருப்பதாக எண்ணுகிறான். எம்மிடமும் முன்பு வந்து வாக்கை(ஜீவநாடி) அறிந்திருக்கிறான். இதழ் (ஜீவநாடி) ஓதுபவனிடம் சில பூஜைகளை செய்ய யாம் (அகத்திய மாமுனிவர்) அருளாணை இட்டிருந்தோம். ஆனால் பல்வேறு காரணங்களால் அது பூர்த்தியடையவில்லை. அது பூர்த்தியடைந்த பிறகு அன்னவனுக்கு வாக்கு உண்டு என்றாலும் இதுபோல தொடர்ந்து ஒரு மனிதன் எண்ணுவது போல உண்மையானது என்றே வைத்துக் கொள்வோம். அந்த அதர்வண வேதத்தால் ஒரு மனிதன் பாதிக்கப்பட வேண்டும் என்று அவன் விதியில் இருந்தால் அந்த பாதிப்பு வரத்தான் செய்யும். இருந்தாலும் தடைபடாத பக்தியும் தாராளமான தர்மமும் இருந்தால் இதிலிருந்து ஒரு மனிதன் வெளியே வந்து விடலாம். சுக்ர வாரமும் (வாய்ப்பு இல்லாதவர்கள்) அனலி வாரம் (ஞாயிறு) உக்கிரமான அன்னையை வணங்கி வர இது போன்ற பிரச்சினைகளிலிருந்து மெல்ல மெல்ல விடுபடலாம்.
கேள்வி: ஆதித்ய ஹ்ருதயம் சொல்லுவதன் மூலம் பிறவியைப் பற்றி அறிந்து கொள்ள முடியுமா?
ஆதித்ய ஹ்ருதயம் ஓது என்று கூறினால் ஒருவன் வினவுவான் (கேட்பான்). ஏன் ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் என்று இளங்கோ கூறியிருக்கிறானே? அதைக் கூறக்கூடாதா? என்று. அதைக் கூறு என்று கூறினால் இல்லையில்லை வடமொழியில்தான் சக்தி அதிகமாக இருக்கிறது. வடமொழியில் உள்ள காயத்ரி மந்திரத்தை சொல்லலாமா? என்று கேட்பான். முன்பு கூறியதுதான் இதற்கும். தாராளமாக ஆதித்ய ஹ்ருதயமும் கூறலாம். வேறு வகை அவரவர்கள் அறிந்த எந்த மொழியாக இருந்தாலும் அந்த மொழி மந்திரங்களையும் கூறலாம். நல்ல ஆத்ம பலம் பிறக்குமப்பா.