கேள்வி: ஒருவர் கண்டிப்பாக தர்ப்பணம் செய்ய வேண்டுமா? அதனால் என்ன பயன்?
அர்ப்பணத்தோடு செய்தால் அது தர்ப்பணம். செய்து தீர வேண்டியிருக்கிறதே என்று செய்தால் அது அவலம். எனவே இது போன்ற பூஜைகள் எதற்காக ஏற்படுத்தப்பட்டன? என்று ஊன்றி கவனித்தால் ஒருவிதமான பொருளாதார சுழற்சி தெரியும். ஒரு தனி மனிதனைப் பார்த்து இயல்பாகவே பிறருக்கு உதவு என்றால் உதவ மாட்டான். அவனை போன்றவர்களுக்கு புரிய வைத்து இது போன்ற பூஜைகள் மூலம் சில தர்ம காரியங்களையும் சில மந்திரங்களை உருவேற்றி அதன் மூலம் அவன் பூர்வீக தோஷங்களைக் குறைப்பதற்குண்டான யுக்தி. கட்டாயம் அவரவர்களால் இயன்ற அளவு செய்து வருவது சிறப்பு. பூர்வீக தோஷத்தையும் எந்த குடும்பத்தில் ஒரு மனிதன் பிறந்திருக்கிறானோ அந்தக் குடும்பத்தில் உள்ள பூர்வீக தோஷமும் அந்த மனிதன் எத்தனை பிறவிகளில் சேர்த்த பாவத்தை நீக்குவதற்கு இது ஓரளவு உதவும். ஏன் என்றால் பெயரளவிற்குதான் இத்தருணம் இது நடந்து கொண்டிருக்கிறது. மீதியைக் குறைப்பதற்கு என்ன வழியென்றால் யாங்கள் (சித்தர்கள்) கூறுவது போல போதுவாக பக்தியும் தர்மமும் இருந்தாலும் இறைவனை பைரவர் வடிவத்திலே வணங்கி பைரவருக்கு இயன்ற வழிபாடுகளை தொடர்ந்து செய்து வர நன்மையுண்டாம்.
கேள்வி: லட்சுமி நரசிம்மர் காயத்ரி மந்திரம்:
அப்பனே இக்கலிகாலத்தில் எது கிடைக்கிறதோ அதை உள்ளன்போடு ஓது. கட்டாயம் இறைவனருள் உண்டு. மந்திரத்திலே தவறும் பிழையும் இருக்கலாம். அது தெரிந்த பிறகு திருத்திக் கொள்ளலாம். தெரியாத நிலையிலே தவறாக உச்சரிப்பதால் இறைவன் ஒன்றும் சினம் கொள்ளப் போவதில்லை. எனவே மந்திரத்தைத் தவறாக உச்சரிப்பதால் குற்றம் வந்துவிடப் போவதில்லை. ஆனால் மனதிலே தவறான எண்ணங்கள் இருந்தால்தான் அது பாவமாக மாறும். மனம் சுத்தமாக பரிசுத்தமாக இருக்கும் நிலையில் இறைவன் எப்படி அழைத்தாலும் இறைவனுக்கு மகிழ்ச்சியே.