கேள்வி: மதுரையில் மீண்டும் மோட்ச தீபம் ஏற்ற குருநாதர் அனுமதி அளிக்க வேண்டும்:
இறைவன் கருணையாலே பல்வேறுவிதமான பூஜைகளை இன்னும் எம் சேய்களுக்கு (பிள்ளைகளுக்கு) யாங்கள் அருளாணையிட்டு செயல்படுத்த வேண்டுமென்ற அவா (விருப்பம்) எமக்கு நிறைய இருக்கிறதப்பா. இப்பொழுது நீயும் உன்னொத்து அன்பர்களும் செய்துவரும் அறப்பணிகளே எமக்கு மிகவும் நெகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. இந்த நிலையிலே இன்னும் பல்வேறு விதமான பூஜைகளையும் யாங்கள் இறைவன் அனுமதித்த பிறகு கூறுவோம். அதே சமயம் எமக்கு வருத்தம் என்று கூற இயலா விட்டாலும் மனிதர்களுக்குப் புரிகின்ற வார்த்தைக்காக அதைக் கூறுகிறோம். இத்தனை ஆண்டுகள் எம்மிடம் வாக்கைக் கேட்டாலும் தமக்குள் பிணக்கு கொண்டு பிரிந்திருக்கின்ற மனிதர்கள் என்று ஒன்று சேருவார்கள்? அவர்கள் ஒன்று சேர்ந்தால் இன்னும் ஊர் கூடி தேர் இழுக்கலாம். ஆனால் எமது வாக்கு என்று அறிந்தாலும் கூட அதையும் கேட்க மறுக்கின்ற விதியமைப்பு கொண்ட மனிதர்கள் நிறைய நிறைய அன்பர்கள் இருப்பதால் சற்று கால அவகாசத்திற்குப் பிறகு இறைவன் அருளாணையிட்ட பிறகு யாம் நீ வினவிய வினாவிற்கு விடை கூறுகிறோம். அதுவரை செய்கின்ற பணியை மேலும் சிறப்பாக மேலும் ஒற்றுமையோடு செய்ய நல்லாசிகள்.
கேள்வி: யார் கேட்டாலும் கருணை செய்வீர்களா? அல்லது மனமார பிராத்தனை செய்பவர்களுக்குத்தான் கருணை காட்டுவீர்களா?
இறைவனின் கருணையாலே கேட்கின்ற விஷயமல்ல. கேட்கின்ற மனிதனல்ல. அவன் வினைப் பயன்களின் தொகுப்பை வைத்து தானப்பா நாங்கள் எதையும் செயலாற்ற முடியும். நல்ல விஷயங்களை பொதுவாக உபதேசம் செய்யலாம். ஆனால் இன்றே என் கஷ்டத்தையெல்லாம் நீக்கு. இல்லையென்றால் நீ இருப்பது பொய் என்று ஒருவன் வந்தால் நாங்கள் மெளனத்தைத் தவிர வேறு எதையும் கடைபிடிக்க இயலாது. இருந்தாலும் மெய்யாக மெய்யாக மனமார இறைவனையோ எம்மையோ ஒருவன் துதித்து ஒரு செயலில் இறங்கினால் கட்டாயம் நாங்கள் இறைவனருளால் வழி காட்டுவோம்.