கேள்வி: வயதானவர்களின் கஷ்டங்களால் அவர்களுக்கும் துன்பம் அவர்களின் இரத்த சம்பந்தங்களுக்கும் துன்பம். இதற்கு யார் காரணம்? அவர்களா? அல்லது இவர்களா?
இறைவனின் கருணையாலே இது குறித்து வெளிப்படையாகப் பேசினால் மனிதர்கள் மனம் வேதனைதான் அடையுமப்பா. பொதுவாகப் பாரத்தால் அகவை (வயது) அதிகமானவர்கள் பல இல்லங்களில் புறக்கணிக்கப்படுவதும் அவர்கள் மனம் வேதனைப்படும் வண்ணம் இளையவர்கள் நடந்து கொள்வதும் பொதுவான விஷயமாக இருந்தாலும் கூட ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நன்றும் தீதும் பிறர் தர வாரா. ஒரு மனிதன் தன் பால்ய பருவத்திலே எதையெல்லாம் விதைக்கிறானோ அதனை அடுத்தடுத்து அறுவடை செய்துதான் ஆக வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறது. தனக்கு நடக்கும் துன்பங்களுக்கும் கொடுமைகளுக்கும் யார் காரணம்? தான் எந்தெந்த சந்தர்ப்பத்தில் சூழலில் எப்படியெல்லாம் நடந்து கொண்டோம்? என்று அவனவன் மனதிற்குத் தெரியும். வெளிப்படையாக அதை அவன் கூறினால் அவனின் அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம் பலருக்கும் புரியும். எனவே ஒவ்வொரு மனிதனும் நேர்மையாக யார் மனதையும் புண்படுத்தாமல் ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் அவனுடைய வாழ்க்கையும் நன்றாகவே செல்லும்.
விதிவிலக்காக மிக மிக உத்தமமான அன்பர்களுக்கும் கடைகாலத்திலோ அல்லது இடைகாலத்திலோ கடுமையான துன்பங்கள் பிணியாகவோ பொருளாதார நெருக்கடியாகவோ அல்லது உறவு சிக்கல்களாகவோ ஏற்படலாம். அது போன்ற நல்ல ஆத்மாக்களுக்கு வினைக் கழிவாக அது ஏற்படுகிறது. அந்த வினை கழிந்தவுடன் அவன் மீண்டும் நலம் பெற்று விடுவான். ஆனால் சிறு வயதில் செய்த பிழைக்காக தவறுக்காக மத்திய காலத்திலும் அந்திம காலத்திலும் இடர்படுகின்ற ஆத்மாக்கள் அந்த இடர்களை நுகர்ந்துதான் ஆக வேண்டும். ஏன்? தன் இளமைக் காலத்திலே தன் பெற்றோர்களைப் புறக்கணித்தவர்கள் தன் கணவனின் பெற்றோரைப் புறக்கணித்தவர்கள் இன்று மட்டும் தனக்குப் பிறர் ஆதரவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? என்பதை அவனவன் மனசாட்சிப்படி சிந்தித்துப் பார்க்க வேண்டும். இருந்தாலும் கூட துன்பப்படுவதற்கு நீதான் காரணம் என்று கூறுவது அநாகரீகம் என்பது எமக்கும் தெரியும். எனவே இது போன்ற துன்பஙகளில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வோடு பிறருக்கு முடிந்தவரை நலம் செய்து வாழ வேண்டும். தன்னைச் சார்ந்தோர்களுக்கு இயன்ற நன்மைகளை செய்ய வேண்டும். அகவை(வயது) அதிகமானவர்கள் மன ரீதியாக வாய் வழியாக மதித்தால் மட்டும் போதாது. மனதிற்குள் நல்ல மரியாதை செய்து வாழ்த்தினால் அவர்களை வணங்கினால் அப்படி வணங்குகின்றவர்களின் அந்திம காலம் (கடைசி காலம்) சிறப்பாகவே இருக்கும். எனவே இது போன்ற இக்கட்டான நிலையில் உள்ளவர்கள் மனதளவிலே இறைவனை எண்ணி வணங்கினால் இறைவன் கருணையாலே கட்டாயம் மாற்றங்கள் நேரிடும்.
தேகம் நலிவு பெறுவதும் அகவை (வயது) அதிகமாவதும் ஒவ்வொரு மனிதனுக்கும் நடக்கக் கூடியதுதான் என்பதை வாலிப காலத்தில் ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும். அப்பொழுதுதான் தனக்கும் அந்திமம் (கடைசி காலம்) இருக்கிறது. அப்பொழுது பிறர் உதவியை எதிர்பார்த்து வாழ வேண்டும். அப்பொழுது யாராவது தன்னைப் புறக்கணித்தால் தன் மனம் வேதனைப்படும் என்கிற அந்த உணர்வு வரும். இவையெல்லாம் வெறும் பால பாடங்கள்தான். இன்னும் எத்தனையோ சூட்சுமங்கள் இருக்கிறது. ஆனால் வாழ்வியலும் அவசர கதியிலும் வாழ்கின்ற மனிதன் இதையெல்லாம் கவனிக்க எங்கே நேரமிருக்கிறது? என்று கூறினால் அவனையும் பிறர் கவனிக்க நேரமில்லாமல் போய் விடுமப்பா.