கேள்வி: இறையை அடைவதற்கு ஸ்தூல வடிவில் குரு அவசியமா? அல்லது தனிப்பட்ட முயற்சியினாலேயே இறையை அடைய முடியுமா?
இறைவன் கருணையாலே யார் இருளை நீக்குகிறாரோ அவர் குரு. யார் பிறவித் தளையை நீக்குவதற்கு வழி காட்டுகிறாரோ அவர் குரு. இது ஒரு புறம் இருக்க ஒன்றை உணர்ந்து கொள்ள ஒன்றை கற்றுக் கொள்ள எது காரணமாக இருக்கிறதோ அது அனுபவமோ நிகழ்வோ சக உறவோ நட்போ இதன் மூலம் தக்க பாடம் கற்றுக் கொண்டோம். இனி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற உணர்வு எத்தருணம் யார் மூலம் அல்லது எதன் மூலம் ஒரு மனிதனுக்கு வருகிறதோ அனைத்தும் குருதான். எனவே புறத்தோற்றத்தில் குருவைத் தேடுவதை விட மானசீகமாக இறைவனை வணங்கி குறிப்பாக இறைவனை குரு தக்ஷிணாமூர்த்தி ரூபத்திலே வணங்கி வந்தால் குரு தொடர்பான ஐயங்கள் நீங்கும். மனதில் உள்ள இருள் நீங்கும். மனித வடிவில் குருவைத் தேட வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. எத்தனைதான் உயர்ந்த புண்ணியங்கள் செய்து பலருக்கு ஆன்மீக வழி காட்டுகிறேன் என்று ஒரு ஆத்மா பிறந்தாலும் இங்கு வந்த பிறகு சிறிது சேற்றைப் பூசிக் கொள்ளத்தான் செய்கிறது. எனவே அவன் 90 நல்ல விஷயங்களை போதித்து சில தவறான விஷயங்களை போதித்து விட்டால் அதைக் கேட்கின்ற மனிதனுக்கும் அந்தத் தவறு பாடமாகப் பதிந்து விடும். எனவே மனித விடிவில் பலரை சென்று பார்ப்பதை தவறு என்று கூறவில்லை. எல்லாம் கேட்டு விட்டு பிறகு இறைவனை மானசீகமாக வணங்கி எது நல்லது? எது அல்லது? என்பதை இறைவா நீ உணர்த்து என்று இறைவனிடம் சரணாகதி அடைவதே மெய்யான குருவிற்கும் குருவின் போதனைக்கும் ஏற்ற வழியாகும்.
கேள்வி: பிறவி தோறும் வரும் வாசனை காமம் குரோதம் (கோபம்) லோபம் (பேராசை) போன்றவற்றைக் கடக்க வழி:
வைராக்யத்தால் மட்டும்தான் கடக்க இயலும்.