அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
எல்லாம் விதிதான் என்றால் மதிக்கு என்ன வேலை இருக்கிறது? என்றெல்லாம் சிந்திக்கின்ற மனிதன் எந்த இடத்தில் மதியை வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் மதியை வைக்காமல் வாழ்வதுதான் விதி அங்கே வெல்வதற்கு வழியாகப் போய் விடுகிறது. விதியை மீறி எத்தனையோ நல்ல விஷயங்கள் ஒவ்வொரு தனிப்பட்ட வாழ்விலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஏதாவது ஒரு மகானின் மூலம் இறைவன் அதனை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார். ஆயினும் பெரும்பாலான பொழுதுகளில் மனிதர்கள் அதனை உணர்வதில்லை. மிகவும் தரம் தாழ்ந்த ஆத்மாவிடம் அதே நிலைக்கு இறங்கி ஒரு மகான் வாக்கு உரைப்பது என்பது கடினம்தான் இருந்தாலும் அதனையும் நாங்கள் (சித்தர்கள்) செய்திருக்கிறோம். எப்படியாவது அந்த ஆத்மா மேலேறி வரவேண்டுமே? அவன் போக்கில் சென்றாவது மேலேற்றலாமே? என்றுதான். ஆனாலும் வழக்கம் போல் விதி வென்று மகான்களின் போதனைகள் எல்லாம் புறந்தள்ளப்பட்டிருக்கின்றன.
இறைவனின் கருணையாலே இந்த ஜீவ அருள் ஓலையிலே வாக்கு இல்லை அல்லது தற்சமயம் வாக்கு பகிர்வதில்லை அல்லது சிலருக்கு வாக்கு கூறுகிறார்கள். பலருக்கு கூறுவதில்லை அல்லது யார் அதிகம் தனம் வைக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் வாக்கு ஓதுகின்ற நிலை இருக்கிறது என்றெல்லாம் தத்தம் மனதிற்கு ஏற்ப அந்த மனம் எந்தளவிற்கு கீழ்மைபட்டிருக்கிறதோ அந்தளவிற்கு எண்ணுகிறார்கள். ஒருவரின் சிந்தனையும் செயலும் சொல்லும் தரம் தாழ்ந்து இருக்க இருக்க அவன் இன்னும் பாவங்களை தொலைக்கவில்லை என்பதுதான் பொருள். பாவங்கள் பெருமளவு குறைந்த ஆத்மா மேலும் பாவங்களை செய்ய அஞ்சும் ஆத்மா ஒரு தீயதை பிறர் செய்ய பார்த்தாலும்கூட அவன் அவ்வாறு செய்திருக்க மாட்டான். ஏதோ ஒரு சந்தர்ப்பம் அல்லது வேறு ஏதோ ஒரு சூழல் அவ்வாறு நிகழ்ந்திருக்கிறது என்று அதைக் கூட ஆக்கப் பூர்வமாகத்தான் பார்க்கும். ஆனால் பாவங்கள் நிரம்பியுள்ள ஒரு ஆத்மா பிறர் செய்கின்ற நற்செயல்களைக்கூட குதர்க்கமாகத்தான் பார்க்க எண்ணும். நல்லவர்களை பார்த்தாலே பாவ ஆத்மாக்களுக்கு தேகமெங்கும் எரிச்சல் வருவது போல் இருக்கும்.