அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
பரந்துபட்ட உலகமும் இந்த பேரண்டமும் நீக்கமற நிறைந்துள்ள அனைத்தும் பரம் பொருள்தான் என்பதை ஒரு மனிதன் நன்றாக உள்வாங்கி திடமாக நம்பி எல்லாம் அவன் செயல் என்று தன்னை பரிசுத்த மனிதனாக மெல்ல மெல்ல மாற்றிக் கொண்டால் அப்படி மாற்றிக் கொள்கின்ற மனிதனுக்கு அப்படி மாற்றிக் கொண்டு உண்மையாக வாழ வேண்டும் உண்மை வழியில் செல்ல வேண்டும் என்று எண்ணுகின்ற மனிதனுக்கு அவன் எங்கிருந்தாலும் இறைவன் எம்போன்ற மகான்கள் மூலமாகவோ வேறு வழி மூலமாகவோ வழிகாட்டிக் கொண்டேயிருப்பார் அப்பா. அதுபோல் ஆத்மாக்களுக்கு யாங்களும் இறைவனருளால் வழிகாட்டிக் கொண்டிருக்கிறோம். இங்கு (குடிலுக்கு) வந்துதான் அவன் வழிமுறைகளைப் பெற வேண்டும் என்பதல்ல. நாங்கள் எத்தனையோ வழி முறைகளை வைத்திருக்கிறோம். அதில் ஒன்றுதான் ஓலை (ஜீவநாடி) மூலம் பேசுவது. வேளை வரும் பொழுது வேறு வேறு மார்க்கங்களையும் நாங்கள் (சித்தர்கள்) கடைபிடிப்போம். விதியிலே ஒரு மனிதனுக்கு அவன் எத்தனை நல்லவனாக இருந்தாலும் கூட நல்லவனாக இருந்து விட்ட அல்லது இருக்கின்ற காரணத்தினாலேயே இறை தரிசனமோ அல்லது சித்தர்கள் தரிசனமோ கிடைக்க வேண்டும் என்பது இல்லை அல்லது ஓலை (ஜீவநாடி) மூலம்தான் சித்தர்களின் வாக்கை அறிந்து முன்னேற வேண்டும் என்ற நிலையும் இல்லை. வேறு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. இதுகுறித்தும் பலமுறை கூறியிருக்கிறோம்.
இதுபோல் நிலையிலே எம்மைப் பொறுத்தவரை இங்கு வருபவர்களுக்கு பலமுறை உரைத்திருக்கிறோம். இதுபோல காலத்திலே பக்தி மார்க்கமும் பரிபூரண சரணாகதி தத்துவமும் அதோடு தக்க ஏழைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்வதும் அந்த தர்ம குணத்தை எப்படியாவது இறையிடம் போராடி பெற்று இன்னும் கூறப் போனால் மனித அறிவு ஏற்றுக் கொள்ள முடியாத எத்தனையோ விஷயங்கள் நாங்கள் (சித்தர்கள்) கூறினாலும் அதில் உச்சகட்டமாக இங்கு வருபவர்கள் வெளியில் ஏளனம் செய்வது ருணம் (கடன்) பெற்று அறம் செய் என்று நாங்கள் (சித்தர்கள்) கூறுகின்ற கருத்தை அதுவும் எல்லோருக்கும் நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. சிலருக்கு சிலவற்றை மனதிலே வைத்து கூறுகிறோம். அந்த தர்மத்தை எவனொருவன் தன்முனைப்பு இல்லாமல் செய்கிறானோ அவனுக்கு ஏதும் கூற வேண்டியதே இல்லையப்பா. அந்த தர்மத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு எத்தனை இடர் எதிர்ப்பு சோதனை வேதனை வந்தாலும் நீ தர்மம் செய்தாயே? அவன் உன்னை நன்றாக ஏமாற்றி விட்டான். அவனைப் போன்ற ஏமாற்றுக்காரனுக்கெல்லாம் நீ ஏனப்பா உதவி செய்கிறாய்? என்று இன்னொருவன் வந்து குழப்பத்தை ஏற்படுத்தினாலும்கூட என் கடன் தர்மம் செய்து கிடப்பதே என்று எவன் தொடர்ந்து தர்ம வழியில் வருகிறானோ அவனுக்கு ஏதும் கூற வேண்டாம். இறையே அவனை வழி நடத்தும். அதைதான் நாங்களும் தர்மம் தர்மம் தர்மம் என்று பலருக்கும் பல முறை கூறுகிறோம். ஆனால் கேட்க விடவேண்டுமே அவனவன் கர்மம். இந்த ஜீவ அருள் ஓலை உண்மை. இதில் வாக்குகளைக் கூறுவது சித்தர்கள்தான் என்று நம்பக்கூடிய அனைவருக்குமே இந்த வாக்கு பொருந்துமப்பா.