கேள்வி: வேதாத்ரி மகரிஷி தன் வாழ்நாளை அர்ப்பணித்து தவ முறை தியான முறை பயிற்சியை சொல்லிக் கொடுத்திருக்கிறார். அது உயர்வு பெறுமா? அதன் மூலம் இந்த உலகம் அமைதியை நோக்கி நகருமா?
இறைவனின் கருணையாலே இந்த உலகிலே மனிதர்கள் எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழக் கூடாது? என்பதற்காக இறைவன் பல்வேறு ஞானியர்களையும் மகான்களையும் அவ்வப்பொழுது மனித வடிவிலேயே அனுப்பி வைத்து போதனைகள் செய்து வருகிறார். சில சமயம் நூல்கள் வாயிலாக கூட பல மனிதர்கள் கண்ணில் நல்ல விஷயங்களை படுமாறு இறைவன் செய்வதும் உண்டு. பல மனிதர்களுக்கு இவையெல்லாம் ஓரளவு தெரியத்தான் செய்யும். ஆனால் மனிதன் அறிவு மயமானவன் அல்ல. உணர்வு மயமானவன். அவன் அறிவுக்கு பல நல்ல விஷயங்கள் தெரிந்தாலும் அவன் உணர்வுக்கு எது பிடித்திருக்கிறதோ அதைதான் செய்வான். மனிதனின் உணர்வுகளைத் தூண்டி விட்டாலே இங்கே எல்லா செயல்களையும் செய்யலாம் என்றுதான் பல மனிதர்கள் காரியத்தை சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே உணர்வுகளை கட்டுப்படுத்தி பெரும்பாலான தருணங்களில் நல்லறிவை தெய்வீக அறிவைப் பயன்படுத்த மனிதன் முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால் கட்டாயம் எத்தனை உயர்ந்த போதனையாக இருந்தாலும் எத்தனை நல்ல விஷயமாக இருந்தாலும் அது வெறும் செவியாடலாக மட்டும் இருக்குமே ஒழிய நடைமுறைக்கு வரவே வராது.
பெரும்பாலான மனிதர்களுக்கு இதை செய்யலாம். இதை செய்யக்கூடாது என்பது தெரிந்தாலும் உடனடியான லாபத்திற்கும் தேகம் சார்ந்த உணர்வுக்கும் அடிமைப்பட்டு செய்யக் கூடாத காரியங்களை செய்து கொண்டுதான் இருக்கிறான். செய்ய வேண்டியவற்றை செய்யாமல் தள்ளிப் போடுகிறான். எனவே தனி மனித ஒழுக்கமும் பண்பும் அவன் தன்னைத்தான் சீர் தூக்கிக் கொள்கின்ற முறையும்தான் முக்கியம். அப்படி தன்னைத்தான் திருத்திக் கொண்டால் ஏற்கனவே போதித்த நல்ல போதனைகளே போதும் மனித குலம் உயர. வெறும் உணர்வுகளுக்கு அடிமையாகி வாழுகின்ற மனிதனுக்கு எத்தனை போதனைகளையும் எத்தனை விதமான கருத்துக்களையும் கூறினாலும் அவைகள் அவன் செவியில் ஏறாது. இறைவனே நேரில் வந்து சொன்னாலும் கூட அத்தருணம் கேட்டுவிட்டு பிறகு அவன் மாற்றப் பாதையில்தான் செல்வான். எனவே தன் உடல் சார்ந்த இச்சைகளையெல்லாம் அவன் தன்னிடம் உள்ள அறிவைக் கொண்டு அடக்க முயன்றால்தான் இதிலிருந்து அவன் மேலேற முடியும்.