கேள்வி: பைரவர் வழிபாடு கால வைரவர் வழிபாடு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு இந்த மூன்று வழிபாடுகளையும் ஒரே மாதிரி செய்யலாமா? மேலும் தேய்பிறை அஷ்டமி வளர்பிறை அஷ்டமி இதில் எது உகந்தது?
அம்மாவை வணங்கு. தாயை வணங்கு என்று கூறினால் எல்லாம் ஒன்றுதானப்பா. பைரவர் என்றால் சிவனின் அம்சம்தான். இந்த பைரவருக்கு 64 வடிவங்கள் இருப்பதாக இப்பொழுது மனிதர்கள் எண்ணியிருக்கிறார்கள். 108 க்கும் மேற்பட்ட பைரவர் வடிவங்களும் வழிபாடுகளும் இருந்தது உண்மை. தற்சமயம் சில வைரவ வழிபாடுகள் மட்டும் இந்தப் பூவுலகில் இருக்கிறது. எனவே எந்த பைரவரை உள்ளன்போடு எப்படி வழிபட்டாலும் நன்மைதான். பொதுவாக அஷ்டமியில் லோகாய காரியங்களை செய்யாமல் இறைவனை வணங்குவது தொண்டுகள் ஆற்றுவது மனிதனுக்கு ஏற்றது. அவனுடைய கடுமையான பாவ தோஷங்கள் வெளிப்படக்கூடிய தருணங்களில் அஷ்டமியும் நவமியும் ஒன்று என்பதால்தான் முற்காலத்திலே லோகாய செயலையெல்லாம் செய்ய வேண்டாம் என்று கூறினார்களே தவிர ஏதோ அஷ்டமியும் நவமியும் தீமை பயக்கக்கூடிய தினமாக மனிதன் எண்ணி விடக்கூடாது. ஒரு மனிதனுக்கு சந்திராஷ்டமம் என்றால் அன்றும் அந்த தினங்களில் அவன் இறை வழிபாடும் தர்ம காரியங்களும் தொண்டும் செய்து வருவது ஏற்புடையதாக இருக்கும். இதுபோல் நிலையிலே எந்த காலமாக இருந்தாலும் பைரவரை உள்ளன்போடு வழிபடலாம். அது மட்டுமல்லாது நல்விதமாய் தீப வழிபாடோ மலர் கொண்டு வழிபாடோ அல்லது ஏதும் இயலாதவர்கள் மனமொன்றி பிராத்தனையோ செய்து வரலாம். இதற்கு அஷ்டமி வரை பொறுத்திருக்க வேண்டியதில்லை. அன்றாடமும் வணங்கலாம். அவரவர்கள் வாய்ப்பு போலவும் வணங்கலாம். எல்லா காலத்திலும் இறைவனை வணங்கலாம். இறைவனை வணங்க காலம் தேவையில்லை. அவனவன் உள்ளம் பக்குவம் அடைந்தால் அதே போதும்.
கேள்வி: மதிய உணவை ஒரு சிறந்த யோகிக்கு வழங்கினால் ஒருவருடைய பூர்வ வினை கழிந்து மறு பிறப்பு இல்லாத நிலையை அடைவார்கள் என்ற கருத்து பற்றி:
தொடர்ந்து எல்லோரையும் யோகியாகப் பார்ப்பது ஒன்றுதான் இதற்கு ஏற்ற வழியாகும். எல்லோருக்கும் வழங்கிக் கொண்டே போவதுதான் சிறப்பு அப்பா. குறிப்பாக இன்ன ஆலயம் செல் இன்ன திதியில் செல் இந்த நட்சத்திரத்தில் செல் இந்தக் கூட்டத்திலே மூன்றாவது வரிசையில் நான்காவதாக அமர்ந்திருக்கிறானே அவன்தான் யோகி என்றால் மனிதன் என்ன செய்வான்? அவனை மட்டும் நன்றாக கவனித்து விட்டு வருவான். இது சுயநலம் இல்லையா? எல்லோருக்கும் உதவ வேண்டும். எல்லோருக்கும் இயன்றதை செய்ய வேண்டும். பிறகு அது தன்னால் யோகியின் கரங்களுக்கு சென்று சேரும். யோகியை யாரும் தேட வேண்டாம். மெய்யான அன்பர்களை நாடி யோகி எனப்படுபவன் தன்னால் வருவான்.