அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
ஒருவன் உலகியல் ரீதியாக தேடக்கூடிய செல்வங்கள் பொருள் ஆஸ்தி இவை அனைத்தும் உடலை விட்டு அவன் சென்ற பிறகு வருமா? உதாரணமாக நாங்கள் (சித்தர்கள்) அடிக்கடி கூறுவது போல ஒரு விலை உயர்ந்த வாகனத்தை வாங்கி அதை இயக்கிப் பார்த்து சந்தோஷப்படுகிறான். நாங்கள் குறை கூறவில்லை. ஆனால் அந்த வாகனம் அவன் அந்த உடலை இங்கேயே விட்டு விட்டு அதாவது இழப்பு கண்ட பிறகு அந்த ஆன்மா அந்த வாகனத்தில் ஏறி அமர்ந்தால் அந்த ஆன்மாவிற்கு அந்த வாகனம் பயன்படுமா? சுகம் தருமா உயர்ந்த வைர கனக அணிமணிகளை வாங்கிக் குவிக்கிறான். அவை எல்லாம் விலை உயர்ந்தது என்று. அவற்றை வாங்கி அவன் உடலோடு இருக்கும் போது கழுத்திலே அணிந்து சந்தோஷப்படுகிறான். இதை மற்ற மனிதன் பார்த்தால் தன்னை மதிக்க வேண்டும் என்கிறான். ஆனால் அதே சமயம் அந்த உடலை விட்ட பிறகு அந்த ஆன்மா அந்த அணிகலன்களை எல்லாம் அணிய இயலுமா? எனவே சுருக்கமாகக் கூறுவது சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஆதியில் இருந்து தொகுத்து சுருக்கமாக மீண்டும் மீண்டும் கூறுவது என்ன என்றால் ஆன்மா எனப்படும் உயிர் அல்லது ஆத்மா எப்படி அழைத்தாலும் ஒரு மனித உடலில் அது இருந்தாலும் அல்லது விலங்கு உடலில் அது இருந்தாலும் அல்லது வேறு எந்த உடலில் இருந்தாலும் அந்த ஆத்மா சந்தோஷமாக நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் பாவங்களற்ற தன்மையை மனிதன் மேற்கொள்ள வேண்டும். புண்ணியத்தை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு ஆத்மா உடலோடு இருந்தாலும் உடலற்று இருந்தாலும் அதனுடன் இருப்பது பாவங்களும் புண்ணியங்களும். எனவே ஆத்மா நித்ய சந்தோஷமாக நித்ய நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் புண்ணியம் புண்ணியம் புண்ணியம் புண்ணியம் புண்ணியம் புண்ணியம் சதாசர்வ காலம் மனிதன் புண்ணியத்தை தேடித்தான் ஆக வேண்டும். ஒரு விலங்கு புண்ணியத்தை சேர்க்க இயலாது. பாவத்தையும் செய்ய இயலாது. அது செய்த பாவத்தை அந்த விலங்கு உடலுக்குள் அந்த ஆத்மா புகுந்து செயல்பட்டு அந்த விலங்காகவே வாழ்ந்து அந்த பிறவியை முடிக்க வேண்டும் என்பது விதியின் கட்டளை. ஆனால் மனிதன் நினைத்தால் புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள முடியும். பாவத்தை குறைத்துக் கொள்ள முடியும். இந்த சுதந்திரம் மனிதனுக்கு இறைவனால் கொடுக்கப்படுகிறது. கொடுத்த சுதந்திரத்தை மனிதன் என்றுமே சரியாக பயன்படுத்தியதாக சரித்திரமில்லை. சரியாக பயன்படுத்தினால் இறைவனருள் அதிக தொலைவில் இல்லை ஆசிகள்.