அகத்தியர் மாமுனிவரின் பொது வாக்கு:
செம்பிலே உள்ள களிம்பை நீக்கி விட்டால் செம்பு தன்னால் ஔிர்வது போல ஒவ்வொரு ஆத்மாவிற்கும் பூர்வீகத்தில் அது எந்த பரமாத்மாவில் இருந்து பிரிந்து வந்ததோ அந்த ஆத்மாவின் சாயல் இருக்கும். ஆனால் ஆசா பாசங்களும் கர்மங்களும் மாயைகளும் மூடியிருப்பதால் அது உணர்வது இல்லை. இவற்றை உணர தொடங்கும் போது உலகியல் அதை உணர விடாது செய்யும். அதை மீறிச் செல்வதற்கு மனத்துணிவு வேண்டும். மன ஆற்றலை திடத்தை தைரியத்தை அதிகரித்துக் கொண்டால் ஆன்ம ஞானத் தேடலில் வெற்றி பெறலாம். ஞானம் அடைய வேண்டும் ஞானத்தை நோக்கி செல்ல வேண்டும் என்றாலே தாய் தந்தை உற்றார் உறவினர் சூழல் எதுவாக இருந்தாலும் கர்மத்தின்படி நடக்கிறது என்று அமைதியாக இருக்க வேண்டும். தாய் கஷ்டப்படுகிறார் தந்தை சிரமப்படுகிறார் என்று எண்ணும் பொழுதே மீண்டும் மனிதன் மாய வலைக்குள் சிக்கி விடுகிறான். எனவே ஒவ்வொரு உடலும் தோற்றமும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமாகப் படைக்கப் பட்டிருக்கிறது. ஆனாலும் பெற்று வந்த கர்மங்களின்படி அதன் வாழ்வின் போக்கும் சிந்தனைகளும் சந்திக்கின்ற அனுபவங்களும் அமைகின்றன.
இருந்த போதிலும் துயரங்களை எல்லாம் களைந்து வாழ வேண்டும் என்ற ஆசை இல்லாத உயிரினம் இல்லை. இவற்றுக்கெல்லாம் ஒட்டு மொத்த ஒரே வழி பிரார்த்தனை (பித்ரு தோஷங்களும் தந்தை வழி தாய் வழி முன்னோர் வழி பெற்ற சாபங்களும் தொடர்வதால் இந்த நிலை). பசு மாடுகளுக்கு உணவு ஆலயத்தில் மீன்களுக்கு உணவு இராமேஸ்வரத்தில் தில யாகம் செய்து குறைத்துக் கொள்ளலாம். எந்த ஒரு மனிதனுக்கும் துன்பங்கள் இருக்கிறதென்றால் முன்வினை இருக்கிறது என்று பொருள். முன்வினை குறையக் குறைய துன்பங்கள் குறைந்து கொண்டே வரும். இந்த வினைப்பயனை பெரும்பாலும் அனுபவித்து தீர்ப்பது ஒரு வகை. தர்மத்தால் தீர்ப்பது ஒரு வகை. இறை வழிபாட்டால் தீர்ப்பது ஒருவகை.